வத்ரா மீது இருக்கும் குற்றச்சாட்டை இந்த நாட்டின் விசாரணை அமைப்புகள் புலன் விசாரணை செய்ய வேண்டும்- ராகுல் பேச்சு
ஹைலைட்ஸ்
- சென்னை தனியார் கல்லூரியில் உரையாற்றினார் ராகுல்
- சென்னையில் இன்று செய்தியாளர்களை அவர் சந்திக்க உள்ளார்
- ஒரு நாள் பயணமாக ராகுல் சென்னைக்கு வந்துள்ளார்
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று சென்னைக்கு வந்தார். அவர் சென்னையில் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரிக்குச் சென்று, அங்கிருக்கும் மாணவிகளுடன் உரையாற்றினார். மாணவிகளுடம் உரையாற்றிய பின்னர், தன்னிடம் கடினமான கேள்விகளைக் கேட்கச் சொன்னார் ராகுல்.
மாணவிகள் கேட்ட சுவார்ஸ்யமான கேள்விகளும் அதற்கு ராகுல் அளித்த பதில்களும்,
தற்கால இந்தியாவின் கல்வியின் நிலை குறித்து உங்கள் அபிப்ராயம்?
“கல்வியில் நாம் மிகக் குறைவான சதவிகித நிதியைத்தான் செலவழிக்கிறோம். அதில் கண்டிப்பாக பெரிய மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும். முதல் வேலையாக நாங்கள் கல்விக்கான பட்ஜெட்டை அதிகரிப்போம். அதில்தான் இந்தியாவின் எதிர்காலமே இருக்கிறது.”
பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் தாக்கம் குறித்தும், பொருளாதாரத்தை மீட்டெடுக்க நீங்கள் என் செய்வீர்கள் என்பது குறித்தும் சொல்லுங்கள்?
“பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்பது யாருக்கும் எந்தப் பயனையும் தரவில்லை. இந்த நாட்டின் பொருளாதாரத்தை அழித்தது. அதிலிருந்து மீண்டு வர இந்தியா இன்னும் தடுமாறிக் கொண்டிருக்கிறது. பொருளாதாரத்தை மீட்டெடுப்பது என்பது வெறுமனே திட்டங்கள் கொண்டு வருவது அல்ல. தற்போது இருக்கும் பதற்ற நிலையை, வெறுப்புப் பிரசாரத்தை ஒழிக்க வேண்டும். சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதன் மூலம், சூழலை மாற்ற முடியும். அதைத்தான் எங்கள் அரசு ஆட்சிக்கு வந்தால் செய்யும்.”
ராபர்ட் வத்ரா குறித்து ஏன் பேச மறுக்கிறீர்கள்?
“வத்ரா மீது இருக்கும் குற்றச்சாட்டை இந்த நாட்டின் விசாரணை அமைப்புகள் புலன் விசாரணை செய்ய வேண்டும். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. நான்தான் அவர் மீது விசாரணை செய்ய வேண்டும் என்று சொல்லும் முதல் நபர். அதே போல, ரஃபேல் ஒப்பந்தம் குறித்து நரேந்திர மோடி மீதும் விசாரணை செய்யப்பட வேண்டும். விசாரணை என்பது குறிப்பிட்ட நபர் மீது இருக்கக் கூடாது. எல்லோருக்கும் ஒரே மாதிரி இருக்க வேண்டும்.”
காஷ்மீர் விவகாரத்தை எப்படி சரிசெய்யப் போகிறீர்கள்?
“நாங்கள் ஆட்சியில் இருந்தபோது, காஷ்மீரில் தீவிரவாதத்தை ஒடுக்க எடுத்த நடவடிக்கை என்பது வேறு. நாங்கள் பல தொழிலதிபர்களை அங்கு கொண்டு சென்றோம். காஷ்மீர் மக்களுடன் நாங்கள் உரையாடினோம். அவர்களை எங்கள் பக்கம் கொண்டு வந்தோம். பொறுமையாக சூழல் மாற ஆரம்பித்தது. 2011, 12, 13 ஆம் ஆண்டுகளில் தீவிரவாதம் என்பது காஷ்மீரில் இல்லாமலேயே போனது. ஆனால், அடுத்து ஆட்சிக்கு வந்த நரேந்திர மோடி தலைமையிலான அரசு, நிலைமையைத் தவறாக கையாண்டது. அவர்களின் கொள்கைகளால் தற்போது அங்கு இறப்புகள் அதிகமாகியுள்ளது. தீவிரவாதம் தழைத்தோங்கியுள்ளது. புல்வாமா தாக்குதலைத் தடுக்கத் தவறியது ஏன்?
காஷ்மீர் விவகாரத்தில் பிரதமர் உண்மையிலேயே அக்கறை கொண்டவராக இருந்திருந்தால், காஷ்மீர் மக்கள் அவரை பதிலுக்கு அணைத்திருப்பர். ஆனால், அவர் அப்படிச் செய்யவில்லை.”
மோடியை ஏன் நாடாளுமன்றத்தில் கட்டிப்பிடித்தீர்கள்?
“அன்புதான் எல்லாவற்றுக்கும் அடிப்படை. எல்லா மதமும் அன்பைத்தான் போதிக்கின்றன. நான் கட்டிப்பிடித்த அன்று பிரதமர் மோடி, என்னைப் பற்றியும், எனது அப்பா, எனது பாட்டி என எல்லோர் பற்றியும் தூற்றிக் கொண்டிருந்தார். காங்கிரஸ் கட்சி, இந்த நாட்டுக்கு எதையும் செய்யவில்லை என்று விமர்சித்தார். எல்லாவற்றையும் நான் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தேன். அவர் என் மேல் வெறுப்பை உமிழ்ந்து கொண்டிருந்தார். யார் வெறுப்பை உமிழ்வார்கள் தெரியுமா..? யாருக்கு அன்பு கிடைக்கவில்லையோ அவர்கள்தான் வெறுப்பை உமிழ்வார்கள்.
பிரதமர் மோடிக்கு ஏனோ அவருக்குக் கிடைத்திருக்க வேண்டிய அன்பு கிடைக்காமலேயே போனது. நான் அந்த அன்பை அவருக்கு கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன். அதனால்தான் கட்டிப்பிடித்தேன்.”
மேலும் படிக்க: ‘பெயர் சொல்லியே கூப்பிடுங்க..!'- கல்லூரியில் மாணவிகளுக்கு ரிக்வஸ்ட் வைத்த ராகுல்