பேச்சுவார்த்தையின் போது வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் என்பது விவாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
New Delhi: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் கே.எஸ்.அழகிரி. பதவியேற்ற பின்னர் அவர் பேசியபோது, “தமிழகத்தில் இருக்கும் 39 மக்களவைத் தொகுதிகளையும் புதுச்சேரியில் இருக்கும் 1 தொகுதியையும் கைப்பறுவதே எனது பிரதான நோக்கம்” என்று கூறியிருந்தார். இந்நிலையில், அவர் டெல்லி சென்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்துப் பேசியுள்ளார். இந்தப் பேச்சுவார்த்தையின் போது வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் என்பது விவாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
அழகிரியுடைய நியமனத்துடன், வசந்த குமார், கே.ஜெயக்குமார், எம்.கே,விஷ்ணு பிரசாத் மற்றும் மயூரா ஜெயக்குமார் ஆகியோர் கட்சியின் செயல் தலைவர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களும் ராகுல் காந்தியை நேரில் சென்று சந்தித்துள்ளனர்.
இந்த சந்திப்புக்கு குறித்து ராகுல் காந்தி, தனது முகநூல் பக்கத்தில், ‘இன்று எனது இல்லத்தில் தமிழக காங்கிரஸ் கிளையின் நிர்வாகிகளை சந்தித்தேன். தமிழ்நாடு காங்கிரஸுக்கு தலைவராக நியமனம் செய்யப்பட்டு கே.எஸ்.அழகிரிஜி தலைமையில் நம் கட்சி, மாநிலத்தில் செல்வாக்கைப் பெரும் என்பதில் எனக்கு நம்பிக்கையுள்ளது. அவர்களுக்கு வாழ்த்துகள்' என்று பதிவிட்டுள்ளார்.
நேற்றைய தினமே, தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட திருநாவுக்கரசரும் ராகுல் காந்தியை சந்தித்துப் பேசினார். சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருநாவுக்கரசர், ‘தலைவர் பதவி கொடுக்கப்பட்டபோது நான் எவ்வளவு சந்தோஷமாக இருந்தேனோ, அதை விட தற்போது டபுள் மடங்கு சந்தோஷத்தில் இருக்கிறேன். 40 ஆண்டு கால அரசியலில் அனைத்துப் பதவிகளையும் பார்த்தவன் நான். எனக்கு அரசியலில் எதிரியே கிடையாது. நான் தலைவராக இருந்தபோது அனைத்து வித ஒத்துழைப்பும் கொடுத்த காங்கிரஸ் தலைவர்களுக்கு நன்றி. புதியதாக தலைவர் பதவியேற்றியுள்ள அழகிரிக்கு வாழ்த்துகள்' என்றார்.