This Article is From Mar 13, 2019

‘ரஃபேல் விசாரணையில் மோடி மீது குற்றம் நிரூபிக்கப்படும்!’- ராகுல் ப்ரஸ் மீட் #Highlights

ரஃபேல் ஒப்பந்தம் கையெழுத்தானது குறித்து நாங்கள் விசாரணை நடத்துவோம்- ராகுல் திட்டவட்டம்

‘ரஃபேல் விசாரணையில் மோடி மீது குற்றம் நிரூபிக்கப்படும்!’- ராகுல் ப்ரஸ் மீட் #Highlights

வேலைவாய்ப்பு, விவசாயிகள், ஒற்றுமையான முன்னேற்றமுள்ள இந்தியாதான் நாடாளுமன்றத்துக்கு எங்களின் கோஷமாக இருக்கும்- ராகுல் பேச்சு

ஹைலைட்ஸ்

  • சென்னைக்கு ஒரு நாள் சுற்றுப் பயணத்தில் உள்ளார் ராகுல்
  • காலையில் அவர் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரிக்குச் சென்றார்
  • அங்கு அவர் கல்லூரி மாணவிகளை சந்தித்து உரையாற்றினார்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று சென்னைக்கு வந்தார். அவர் சென்னையில் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரிக்குச் சென்று, அங்கிருக்கும் மாணவிகளுடன் உரையாற்றினார். இதையடுத்து அவர் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ராகுலின் அதிரடி பதில்களின் தொகுப்பு:

பிரதமர் மோடி குறித்து அவர் பேச ஆரம்பிக்கையில்,

‘இந்த செய்தியாளர்கள் சந்திப்பின் முதலிலேயே இந்த விஷயத்தைப் பற்றி சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். பிரதமர் நரேந்திர மோடிக்கு, என்னைப் போல் செய்தியாளர்களைச் சந்திக்கும் தைரியம் இருக்கிறதா. கல்லூரி மாணவிகளை சந்தித்து, கேள்விகளுக்கு பதில் சொல்லும் துணிச்சல் இருக்கிறதா. அதுதான் நரேந்திர மோடிஜி' என்றார். 

ரஃபேல் விமான ஒப்பந்தத்தின்படி, முதல் கட்டமாக சில விமானங்கள் இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவுக்கு வரும். அப்படி வரும் பட்சத்தில், உங்கள் தலைமையிலான ஆட்சி அமைந்தால் என்ன நடவடிக்கை எடுக்கும்?

‘ரஃபேல் ஒப்பந்தத்தில் விமானங்கள் இந்தியாவுக்கு வருமானால், அது குறித்து என்ன முடிவெடுக்கப்படும் என்பது இப்போது சொல்ல முடியாது. ரஃபேல் ஒப்பந்தம் குறித்து முழுமையான ஆவணங்கள் எங்களை கைகளுக்குக் கிடைக்க வேண்டும். அதை நாங்கள் பரிசீலித்துதான் ஒரு முடிவுக்கு வர முடியும். இந்த நேரத்தில் எந்த பதிலும் சொல்ல முடியாது.

ஆனால், என்னால் இன்னொரு விஷயம் பற்றி உறுதியாக சொல்ல முடியும். ரஃபேல் ஒப்பந்தம் கையெழுத்தானது குறித்து நாங்கள் விசாரணை நடத்துவோம். அந்த விசாரணையில் அனில் அம்பானியும், நரேந்திர மோடியும் குற்றம் செய்தார்கள் என்பது நீரூபணமாகும்'

ஹைட்ரோ கார்பன் முதல் ஸ்டெர்லைட் வரை தமிழகத்துப் பிரச்னைகள் குறித்து காங்கிரஸ் நிலைப்பாடு என்ன?

‘தமிழக விவகாரங்கள் குறித்து மாநில காங்கிரஸ் தலைவர்கள் பேசினால்தான் சரியாக இருக்கும். ஆனால், நான் இதற்கு பரந்துப்பட்ட பதிலை சொல்ல விரும்புகிறேன். தமிழகத்தைத் தற்போது பிரதமர் மோடி, டெல்லியிலிருந்து ரிமோட் மூலம் ஆட்சி செய்து வருகிறார். இது தமிழக மக்களுக்கு அவர் செய்யும் துரோகம். தமிழக மக்கள், தங்களை ஆட்சி செய்து கொள்ள வேண்டும். அதற்கான முழு தகுதியும் அவர்களுக்கு இருக்கிறது. வரலாற்றில் முதன்முறையாக தமிழக மக்கள், பாஜக ஆட்சியில் கீழ்த்தரமாக நடத்தப்படுகின்றனர்'

எழுவர் விடுதலை குறித்து என்ன முடிவெடுக்கப் போகிறீர்கள்?

‘எழுவர் விடுதலை குறித்து சட்ட ரீதியாக என்ன சாத்தியம் என்பதைப் பார்க்க வேண்டும். நீதிமன்றம் எப்படி வழிகாட்டியுள்ளதோ, அதன்படிதான் நாங்கள் முடிவெடுப்போம். நாங்கள் கருணையுடவர்கள். மன்னிக்கும் மனோபாவம் கொண்டவர்கள்' 

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் கல்வி மீண்டும் பொதுப் பட்டியலுக்குக் கொண்டுவரப்படுமா?

‘கல்வி குறித்து தற்போது பல்வேறு சர்ச்சைகள் இருக்கின்றன. ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சொல்வதுதான் இந்திய கல்விப் பாடங்களில் திணிக்கப்படுகிறது. அது மாற்றப்பட வேண்டும். கல்வி நிறுவனங்கள் சுதந்திரமாக இயங்க நாங்கள் நடவடிக்கை எடுப்போம். கல்விக்கு எங்கள் தலைமையிலான ஆட்சி அதிக நிதி ஒதுக்கும். மாநிலங்களின் உரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். எந்த அரசு அமைப்பும் ஒரு இடத்தில் அடைபடுவதை நாங்கள் விரும்பமாட்டோம்'

நீட் தேர்வு குறித்து என்ன செய்யப் போகிறீர்கள்?

‘நீட் தேர்வில் பல்வேறு குளறுபடிகள் இருக்கின்றன. அது குறித்து எங்களால் பேசி ஒரு சுமூக முடிவை கொண்டு வர முடியும் என்று நம்புகிறோம்'

தே.ஜ.கூ கூட்டணியில் பிரதமர் மோடிதான், மீண்டும் பிரதமர் வேட்பாளர் என்று தெரிவித்துள்ளார்கள். உங்கள் கூட்டணி சார்பில் அப்படி யாரும் அறிவிக்கப்படவில்லையே?

‘ஆளுங்கட்சிக் கூட்டணிக்கு ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். பாஜக தலைமையிலான ஆட்சியை வீழ்த்தி வீட்டுக்கு அனுப்புவதுதான் எதிர்கட்சிகளான எங்களின் முதல் குறிக்கோள். அதைச் செய்வதற்கு பிரதமர் வேட்பாளர் அறிவிக்கப்பட வேண்டும் என்பது அவசியமில்லை. அப்படித் திணிப்பதும் சரி கிடையாது'

பெண்களுக்கு இந்தத் தேர்தலில் காங்கிரஸ், இட ஒதுக்கீட்டை அமல் செய்யுமா?

‘லோக்சபா மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் பெண்களுக்கு 33 சதவிகித இடங்களை காங்கிரஸ் ஒதுக்கும். பெண்களுக்கு அரசு வேலைகளில் 33 சதவிகித இடங்களை உறுதி செய்யும் சட்டத்தையும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நடைமுறை படுத்துவோம்'

நாடாளுமன்றத் தேர்தலுக்கு உங்கள் கோஷம் என்ன?

வேலைவாய்ப்பு, விவசாயிகள், ஒற்றுமையான முன்னேற்றமுள்ள இந்தியாதான் நாடாளுமன்றத்துக்கு எங்களின் கோஷமாக இருக்கும். 

 

மேலும் படிக்க‘மோடியை கட்டிப்பிடித்தது முதல் ராபர்ட் வத்ரா வரை'- சென்னையில் ராகுல் காந்தி உரையின் ஹைலைட்ஸ்!

.