கொரோனா காரணமாக லட்சக்கணக்கான மக்கள் வேலையிழந்து, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனர்
ஹைலைட்ஸ்
- 6 ஆண்டுகளில் கச்சா எண்ணெய்விலை குறைந்தாலும் கலால் வரியை அரசு உயர்த்தியது
- பெட்ரோல் மீதான கலால் வரி 258 சதவீதமும்
- டீசல் மீதான கலால் வரி 820 சதவீதமும் உயர்த்தப்பட்டுள்ளது
New Delhi: நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய நிலையில் மத்திய அரசானது தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலையுயர்வினை அதிகரிப்பதற்கான எவ்வித நியாயமான காரணமும் இல்லை எனவும், இந்த நெருக்கடியான நேரத்திலும் மக்களை லாபத்திற்காக சுரண்டுவதாகவும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா காரணமாக லட்சக்கணக்கான மக்கள் வேலையிழந்து, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, சிறிய, பெரிய தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு, நடுத்தர மக்கள் , விவசாயிகள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பெட்ரோல், டீசல் விலையை அரசு உயர்த்துவதற்கான காரணம் புரியவில்லை என அவர் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த வாரத்தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தோராயமாக 9% சரிந்தும் அதன் பலன் மக்களுக்கு கிடைக்கவில்லை.கடந்த 6 ஆண்டுகளில் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத வகையில் குறைந்தாலும் கலால் வரியை அரசு உயர்த்தியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 6 ஆண்டுகளில் பெட்ரோல் மீதான கலால் வரி 258 சதவீதமும், டீசல் மீதான கலால் வரி 820 சதவீதமும் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசுக்கு 18,00,000 கோடி வருவாய் கிடைத்துள்ளது. எனவே விலையேற்றத்தை குறைத்து மக்கள் பலனடையும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார். மேலும் மிகவும் இக்கட்டான காலகட்டத்தில் உதவி தேவைப்படும் மக்களுக்கு நேரடியாக அவர்களது கைகளுக்கு பணம் சென்று சேரும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சோனியா காந்தி பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.