'Citizenship Amendment Bill-ஐ யார் ஆதரித்தாலும் அது இந்த நாட்டின் அடிக்கட்டுமானத்தை தகர்க்கும் முயற்சியாகவே பார்க்க முடியும்'- Rahul Gandhi
New Delhi: திருத்தப்பட்ட குடியுரிமை மசோதாவுக்கு லோக்சபா ஒப்புதல் கொடுத்த நிலைநில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசை காட்டமாக விமர்சித்துள்ளார் காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி. ‘இந்தியாவின் அடிக்கட்டுமானத்தையே இந்த மசோதா தகர்த்துவிடும்,' என்று கருத்து தெரிவித்துள்ளார் ராகுல். மகாராஷ்டிராவில் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்திருக்கும் சிவசேனா, மத்திய அரசு கொண்டு வந்த மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்த நிலையில், ராகுல் காந்தியின் கூர்மையான கருத்து வெளிப்பட்டுள்ளது. ‘தேசிய நலனிற்காக' மசோதாவை ஆதரித்ததாக சிவசேனா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
“திருத்தப்பட்ட குடியுரிமை மசோதா இந்திய அரசியல் சட்ட சாசனத்தின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் ஆகும். அதை யார் ஆதரித்தாலும் அது இந்த நாட்டின் அடிக்கட்டுமானத்தை தகர்க்கும் முயற்சியாகவே பார்க்க முடியும்,” என்று ட்வீட்டர் பக்கம் மூலம் கொதித்துள்ளார் ராகுல்.
திருத்தப்பட்ட குடியுரிமை மசோதாவில், பாகிஸ்தான் வங்கதேசம் மற்றும் அப்கானிஸ்தானில் இருக்கும் இந்து, சீக்கியர்கள், புத்தர்கள், ஜெயினர்கள், பார்சிக்கள் மற்றும் கிறித்துவர்கள், டிசம்பர் 31, 2014 ஆம் ஆண்டு வரை மத ஒடுக்குமுறைக்கு ஆளாகி இந்தியாவுக்கு வந்திருந்தால் அவர்கள் அகதிகளாக நடத்தப்படாமல், குடியுரிமை வழங்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மசோதா மூலம் பாகிஸ்தான், வங்கதேசம், அப்கானிஸ்தானைச் சேர்ந்த முஸ்லிம்களுக்கு இந்தியாவில் குடியுரிமை கொடுக்கப்படாது என்பதை முன்வைத்து எதிர்க்கட்சிகள் குடியுரிமை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
“நாங்கள் தேச நலனிற்காக மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்தோம். காங்கிஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணியில் இருந்தாலும், அந்தக் கட்சிகளோடு உடன்பாடு என்பது மகாராஷ்டிராவிற்கு மட்டுமே பொருந்தும்,” என்று சிவசேனா எம்.பி., அரவிந்த் சாவந்த் NDTV-க்குப் பேட்டியில், மசோதா ஆதரவு நிலைப்பாடு குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
பாஜக கூட்டணியிலிருந்த சிவசேனா, மகாராஷ்டிராவில் அதிகாரப் பங்கீடு கொடுக்கவில்லை என்பதை முன்னிருத்தி கூட்டணியை முறித்தது. தொடர்ந்து நேரெதிர் கொள்கைகளைக் கொண்ட காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து மகாராஷ்டிராவில் ஆட்சி அரியணையிலும் ஏறிவிட்டது சேனா. இந்தக் கூட்டணியை தக்கவைத்திருப்பதுதான் குறைந்தபட்ச செயல் திட்டடம் (Common Minimum Progrmme - CMP). காங்கிரஸ் தரப்பு, மசோதாவுக்கு எதிராக நிலைப்பாடு எடுத்துள்ள நிலையில் சேனா, அதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இந்நிலையில்தான், ‘சிஎம்பி மகாராஷ்டிராவிற்கு உள்ளே மட்டுமே' என்று புதிய பதிலைத் தெரிவித்துள்ளது சிவசேனா.
சிவசேனா, மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்ததை வரவேற்றுள்ள நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலத் ஜோஷி, “நான் அவர்களுக்கு நன்றி கூற விரும்புகிறேன். நாட்டின் நலனிற்கு இந்த மசோதா அவசியம் என்பதை அவர்கள் உணர்ந்துள்ளார்கள். நாங்கள் அனைத்துக் கட்சிகளிடமும் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு கேட்டிருந்தோம்,” என்றார். அவர் இந்த இணக்கம் மகாராஷ்டிராவிலும் தொடருமா என்பது குறித்துப் பேசுகையில், “அது சேனாவின் கையில்தான் உள்ளது,” என்றார்.