இந்த முறை காங்கிரஸ், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியுடன் இணைந்து போட்டியிட உள்ளது
New Delhi: தெலங்கானா தேர்தல் களம் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. அடுத்த மாதம் 7 ஆம் தேதி அங்கு தேர்தல் நடக்க உள்ளதால், மாநில கட்சிகளும் தேசிய கட்சிகளும் காரசாரமான பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் காங்கிரஸ் மொத்தம் இருக்கும் 119 தொகுதிகளில் 65 இடங்களில் போட்டியிடப் போகும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்தக் கட்சியின் மத்திய தேர்தல் கமிட்டி நடத்திய சந்திப்பில், வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டது. கமிட்டி சந்திப்பின் போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உடனிருந்தார்.
தெலங்கானா மாநிலம், ஆந்திராவிலிருந்து தனியாக பிரிந்து சென்ற பிறகு, சந்திரசேகர் ராவ் தலைமையிலான ராஷ்டிரிய சமிதி கட்சி ஆட்சி அமைத்தது. தற்போது இரண்டாவது முறையாக அம்மாநிலத்தில் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்க முயற்சி எடுத்துள்ளது.
இந்த முறை காங்கிரஸ், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியுடன் இணைந்து போட்டியிட உள்ளது. இன்னும் அந்தக் கட்சியுடன் தொகுதி பங்கீடு முடியாமல் இருந்த நிலையில், முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது காங்கிரஸ்.
கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக, தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி வைத்து களத்தில் இறங்கியது. ஆனால், மோடி அரசின் மீது கொண்ட அதிருப்தி காரணமாக, சாந்திரபாபு நாயுடு கூட்டணியை முறித்தார். அவர் நாட்டில் இருக்கும் எதிர்கட்சிகளை ஒன்றிணைத்து பாஜக-வுக்கு எதிராக லோக்சபா தேர்தலில் குதிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்.