This Article is From Apr 19, 2019

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி சிவசேனாவில் இணைந்தார்!!

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, அவரது மகன் ஆதித்யா தாக்கரே ஆகியோர் முன்னிலையில் பிரியங்கா சதுர்வேதி கட்சியில் இணைந்திருக்கிறார்.

நேற்று மாலைதான் பிரியங்கா சதுர்வேதி தனது ராஜினாமா கடிதத்தை ராகுல் காந்தியிடம் அளித்தார்.

ஹைலைட்ஸ்

  • காங்கிரசில் செய்தி தொடர்பாளராக இருந்தவர் பிரியங்கா சதுர்வேதி
  • மதுராவில் நடந்த செய்தியாளர் சந்திப்பு பிரச்னை ஏற்படுத்தியது
  • காங். இருந்து விலகிய 24 மணிநேரத்திற்குள் சிவசேனாவில் சேர்ந்தார்
New Delhi/Mumbai:

காங்கிரசின் பிரபல செய்தி தொடர்பாளராக இருந்த பிரியங்கா சதுர்வேதி, அக்கட்சியில் இருந்து விலகி சிவசேனாவில் இணைந்துள்ளார். அவர் கடந்த 10 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் பணியாற்றினார். கட்சியில் இருந்து விலகிய 24 மணி நேரத்தில் பிரியங்கா சதுர்வேதி சிவசேனாவில் சேர்ந்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், 'நான் கடந்த 10 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் இருந்தேன். கடைசியில் பெண்கள் உரிமை விவகாரத்தில் பிரச்னை ஏற்பட்டதால் வேதனையுடன் நான் விலகுகிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார். 
 

மதுராவில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போது தன்னிடம் காங்கிரஸ் நிர்வாகிகள் தவறாக நடக்க முயன்றனர் என்று பிரியங்கா சதுர்வேதி புகார் கூறியிருந்தார். இந்த நிலையில் அவர் காங்கிரசில் விலகி சிவசேனாவில் இணைந்துள்ளார். 
 


சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, அவரது மகன் ஆதித்யா தாக்கரே ஆகியோர் முன்னிலையில் பிரியங்கா சதுர்வேதி கட்சியில் இணைந்திருக்கிறார். நேற்று மாலைதான் பிரியங்கா சதுர்வேதி தனது ராஜினாமா கடிதத்தை ராகுல் காந்தியிடம் அளித்தார். 

அவர் தனது ராஜினாமா கடிதத்தில், ''கடந்த சில வாரங்களாக எனக்கு நடந்த சம்பவங்கள் கட்சியில் எனக்கு மரியாதை இல்லை என்பதை தெரிவிக்கும் வகையில் இருந்தன. அதனால் ஒரு முடிவுக்கு வந்து விட்டேன். அதே நேரத்தில் பெரும்பாலான நேரத்தை காங்கிரஸ் கட்சிக்காக செலவிட்டிருக்கிறேன். காங்கிரஸ் மீதான மதிப்பும் மரியாதையும் என்றைக்கும் எனக்கு இருக்கும்'' என்று குறிப்பிட்டுள்ளார். 

.