ராஜஸ்தான் துணை முதல்வர் சச்சின் பைலட்
Jaipur: ராஜஸ்தானில் பெண்களுக்கு சட்டசபையில் 33 சதவீத இட ஒதுக்கீடு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக துணை முதல்வர் சச்சின் பைலட் கூறியுள்ளார்.
ஜெய்ப்பூரில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது-
நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்குவோம் என்று காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. இதுதொடர்பாக அமைச்சரவை கூட்டம் நடத்தி ஆலோசித்தோம்.
சட்டசபையில், மாநில அளவில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்குவது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. நாடு முழுவதும் இதனை நிறைவேற்ற முடியாவிட்டாலும் காங்கிரஸ் ஆளும் அனைத்து மாநிலங்களிலும் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்குவோம்.
கடந்த 5 ஆண்டுகளில் பாஜக அரசு பலமுறை அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வந்தது. ஆனால் பெண்களின் முன்னேற்றத்திற்காக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.