This Article is From Feb 12, 2019

"நாடும் நமதே… 40-ம் நமதே…”- காங்., செயல் தலைவர் Dr. K. ஜெயக்குமார் சரவெடி பதில்கள் #Exclusive

காங்கிரஸ் கோஷ்டிப் பூசல்..!’, ’திருநாவுக்கரசர்-ரஜினி சந்திப்பு பின்னணி?’ - பரபர கேள்விகளுக்கு காங்., செயல் தலைவர் ஜெயக்குமார் சரவெடி பதில்கள்

ஒரு வாரத்துக்கு முன்பு வரை காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவராக இருந்தவர் திருநாவுக்கரசர். ஆனால், இப்போது கே.எஸ்.அழகிரிதான் தலைவர். அவர் மட்டுமல்லாமல் 5 செயல் தலைவர்களை வேறு நியமித்துள்ளது காங்கிரஸ் மேலிடம். செயல் தலைவர் பதவியே தமிழக காங்கிரஸுக்குப் புதியது என்பதை கவனிக்க வேண்டும். விளம்பரங்களுக்கும் யுக்திகளுக்கும் பெயர் போன பாஜக-வை எதிர்கொள்ள காங்கிரஸ் தனது அனைத்து அஸ்திரங்களையும் ஒன்றன் பின் ஒன்றாக இறக்கிவிட்டுக் கொண்டிருக்கிறது.

இந்த புதிய நடவடிக்கைகள் வெற்றிப் பாய்ச்சலாக மாறுமா அல்லது 2014 தேர்தல் போல வெற்றுக் கூச்சலாக வீழுமா என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை தமிழக காங்கிரஸின் செயல் தலைவராக பொறுப்பேற்றுள்ள ஜெயக்குமாரிடம் முன்வைத்தோம். அவரும் சரவெடி போல பதில்களை கொட்டினார்.

தமிழக காங்கிரஸில் தலைவர், செயல் தலைவர் என்று பல்வேறு பொறுப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. புதிய பொறுப்பாளர்களின் பிரதானப் பணி என்ன?

காங்கிரஸில் அடுத்தடுத்த பல மாற்றங்கள் வரும். தொலைநோக்குப் பார்வையோடு தற்போது எங்களுக்குப் பதவி வழங்கப்பட்டுள்ளது. எங்கள் இலக்கு என்பது நெடு காலத்துக்கானது. ஆனால், தற்போதைக்கு எங்களின் பிரதான இலக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருக்கும் 40 நாடாளுமன்றத் தொகுதிகளையும் கைப்பற்றுவதுதான்.

கோஷ்டிப் பூசலுக்கு பெயர் போனது காங்கிரஸ். பல்வேறு கோஷ்டிகளை எப்படி சமாளிப்பீர்கள்?

கோஷ்டிகள் இல்லாத கட்சியே கிடையாது. அப்படி இருப்பது நல்லதுதான். கோஷ்டியே இல்லாத கட்சிக்குள் சர்வாதிகாரம்தான் ஓங்கி இருக்கும். பாஜக-வில் அப்படித்தான் உள்ளது. மோடிக்கு எதிராக யாராவது பேசுவார்களா. காங்கிரஸுக்குள் கோஷ்டிகள் இருப்பது ஜனநாயகத்தின் வெளிப்பாடு. அது எங்களின் பலமாக நாங்கள் மாற்றிக் காட்டுவோம். தற்போது தலைவராக பதவியேற்றிருக்கும் கே.எஸ்.அழகிரி, அனைவரையும் அரவணைத்துச் செல்லக்கூடியவர். எனவே, காங்கிரஸிடமிருந்து நீங்கள் நேர்மறையான அரசியலை இனி பார்க்க முடியும்.

புதிதாக பதவியேற்கப் போகும் பொறுப்பாளர்கள் டெல்லிக்கு சென்று ராகுல் காந்தியை சந்தித்த அதே நாளில் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசரும் பார்க்கிறார். அடுத்து அவர் ரஜினியை சந்திக்கிறார். என்னதான் நடக்கிறது காங்கிரஸுக்குள்?

தமிழக காங்கிரஸின் தலைவராக பொறுப்பு வகித்து, கட்சியை திறம்பட வழிநடத்திச் சென்றவர் திருநாவுக்கரசர். அவர் வகிக்காத பதவியே இல்லை. அப்படிப்பட்டவர் பொறுப்பிலிருந்து விலகும்போது, அவரை அழைத்து உரிய மரியாதை செய்வதுதான் மரபு. அதைத்தான் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செய்தார். அவர் காலையில் ராகுலை சந்தித்தார். நாங்கள் அன்று மதியம் அவரைச் சந்தித்துவிட்டு வந்தோம். இதில் எந்த உட்கட்சிக் குழப்பமும் இல்லை.

இரண்டாவது, ரஜினியை சந்தித்தது பற்றி சொல்கிறேன். அன்று நானும் திருநாவுக்கரசரின் இல்லத்துக்கு சென்றிருந்தேன். ஒரு அரை மணி நேரம் அங்கேயே இருந்திருந்தால், ரஜினியை நானும் கூட சந்தித்திருப்பேன். ரஜினி சென்ற பின்னர் எதேச்சையாக திருமாவளவனும் சென்றார். மூவரும் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அவ்வளவுதான். அதில் எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை. ஆனால், ஊடகங்கள்தான் அதைத் தேவையில்லாமல் பெரிதுபடுத்தி வருகின்றன.

தலைவரை மட்டும் மாற்றியிருக்கலாமே. ஏன் செயல் தலைவர்கள் என்ற பொறுப்புகளை உருவாக்க வேண்டும். இதன் நோக்கம் என்ன?

சமீபத்தில் மத்திய பிரதேசத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றோம். அங்கு இதே போன்றதொரு யுக்தி பயன்படுத்தப்பட்டது. மேலும் எங்கள் தலைவர் ராகுல் காந்தி, கட்சியை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்ல இந்த செயல் தலைவர் பதவியை உருவாக்கியுள்ளார். எனவே, மக்களுடன் இன்னும் நெருக்கமாக பழகவே, கட்சியின் தலைமை எங்களுக்கெல்லாம் பதவி கொடுத்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலில் தற்போது திமுக கூட்டணியில் காங்கிரஸ்தான் அதிகாரபூர்வமாக இணைந்துள்ளது. இன்னும் மதிமுக, விசிக, சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட இதர கட்சிகளும் இணைய வாய்ப்புள்ளது. அப்படி இருக்கும்போது தொகுதி பங்கீட்டில் பிரச்னைகள் வராதா. அது குறித்து திமுக-விடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளீர்களா?

காங்கிரஸின் பிரதான நோக்கம் என்பது மதவாத சக்தியான பாஜக-வை வீழ்த்துவதுதான். அதனால், இந்த தொகுதி பங்கீடு விஷயமெல்லாம் எங்களது கூட்டணியில் பிரதானம் பெறாது. மேலும் வைகோ, திருமா போன்றவர்களுக்குக் கூட்டணி தர்மம் பற்றி நன்றாகத் தெரியும். அவர்கள் ஒன்றும் நேற்று வந்த அரசியல்வாதிகள் அல்ல. கூட்டணிக்கு ஏற்ப அவர்களுக்கும் எத்தனை இடங்கள் கேட்க வேண்டும் என்பது தெரியும். நாங்கள் அனைவரும் மதச்சார்பற்ற கொள்கையை காப்பாற்றுவதற்காக ஒன்றிணைந்துள்ளோம். அதனால், எங்களுக்குள் எந்தப் பிரச்னையும் வராது. அதைப் பற்றி ஊடகங்கள் கவலைப்படத் தேவையில்லை.

ராகுல் காந்தியை டெல்லியில் சென்று சந்தித்தீர்கள். சந்திப்பில் என்னவெல்லாம் பேசப்பட்டது. தமிழகத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்க வேண்டும் என்று அவர் சொன்னாரா?

அவர் எங்களை சந்தித்தது மரியாதை நிமித்தமாக மட்டும்தான். ஆனால், கட்சிக்குள் பேசும் யுக்திகளை நான் பொது இடத்தில் கூற மாட்டேன். எங்களது எதிரிகள் அதை கவனமாக உள் வாங்கி அதற்கு ஏற்றாற் போல காய் நகர்த்துவார்கள்.

2014 தேர்தலில் பாஜக, விளம்பரங்களில் புதிய உச்சத்தைத் தொட்டது. மோடி மிகச் சிறந்த ‘மார்கெட்டிங் வல்லுநராக' பார்க்கப்பட்டார். அப்படியிருக்க, இந்தத் தேர்தலில் காங்கிரஸ் அகில இந்திய அளவிலும், தமிழக அளவிலும் எப்படிப்பட்ட பிரசார யுக்திகளைக் கையாளும்?

மோடி ஒரு மார்க்கெட்டிங் வல்லுநர் என்றெல்லாம் நான் சொல்லமாட்டேன். அவர் ஒரு ஏமாற்றும் வல்லுநர். பச்சைப் பொய் பேசும் நபர். மக்கள் அவரை அப்படித்தான் அடையாளம் காணுகிறார்கள். அவர் என்ன பேசினாலும், பொய்தான் பேசுவார் என்று எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது. அவர் பேச பேச எங்களுக்குத்தான் வாக்குகள் அதிகமாக விழும். மோடி அலை அல்ல, மோடிக்கு எதிரான அலைதான் இப்போது நாடு முழுவதும் வீசிக் கொண்டிருக்கிறது. அதனால், காங்கிரஸ் தலைமையில்தான் அடுத்த ஆட்சி அமையும்.

காங்கிரஸ் கூட்டணியில், பல எதிர்கட்சிகள் சேர தயக்கம் காட்டி வருகின்றன. இது பாஜக-வுக்கு சாதகமாக அமைந்துவிடாதா?

இப்போது அவர்கள் தயக்கம் காட்டலாம். ஆனால், அந்த நிலைமை மாறும். பிரதான எதிர்கட்சிகள் அனைத்தும் பாஜக-வுக்கு எதிரான நிலைபாட்டில்தான் உள்ளன. அப்படியென்றால், தேர்தலுக்குப் பின்னர் அவர்கள் சார்பில் ஒருவர் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அவர் பாஜக-வைச் சேர்ந்தவராக இருக்கமாட்டார். அந்த நபரை தேர்ந்தெடுக்க காங்கிரஸின் ஆதரவு தேவைப்படும் இல்லையா. அப்போது அனைவரும் காங்கிரஸ் என்கிற ஒரு குடைக்குக் கீழ்தான் வந்தாக வேண்டும்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ‘சோனியா மகனே வருக, நிலையான ஆட்சி தருக' என்று முழக்கமிட்டதை, உங்களுடன் தோழமையாக இருக்கும் எதிர்கட்சிகளே வரவேற்கவில்லையே, அதை எப்படி பார்க்கிறீர்கள்?

இது குறித்து ஸ்டாலினே அருமையாக விளக்கினார். சென்னையில் நடந்த நிகழ்ச்சியில்தான் ஸ்டாலின் அந்த கருத்தைச் சொன்னார். அதே நேரத்தில் மேற்கு வங்கத்தில் தான் கலந்து கொண்ட நிகழ்ச்சியில், ‘ராகுல் பிரதமராக வேண்டும் என்பது திமுக-வின் விருப்பம். அதைத்தான் முன் மொழிந்தோம். தோழமைக் கட்சிகளும் சீக்கிரமே அந்த இடத்துக்கு வருவார்கள்' என்று கூறினார். ஸ்டாலின் சொன்னதையே தான் நானும் வழிமொழிகிறேன். ஸ்டாலின் சொன்ன கருத்து, எங்களை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது.

ப்ரியங்கா காந்திக்கு, தேர்தலுக்கு முன்னர் பொதுச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. இது காங்கிரஸை, ‘குடும்ப கட்சி' என்று முத்திரைக் குத்துவதற்கு ஏதுவாக அல்லவா மாறியுள்ளது?

அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. இரண்டு விதங்களில் தலைவர்களைப் பிரிக்கலாம். ஒன்று மக்கள் மீது திணிக்கப்படும் தலைவர். இன்னொரு வகை, மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தலைவர். சோனியா காந்தி, ராகுல் காந்தி, ப்ரியங்கா காந்தி ஆகியோர் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தலைவர்கள். அவர்கள் தேர்தலில் நின்றால், மக்கள் பெரு வாரியான ஆதரவு கொடுக்கிறார்கள்.

காங்கிரஸின் யுக்தி என்னவென்று கேட்கிறீர்கள். இதுதான் எங்கள் யுக்தி என்று, ப்ரியங்காவை களமிறக்குகிறோம். ஆனால், அதையும் கேள்விக்கு உள்ளாக்குகிறீர்கள். ஒரே குடும்பத்தில் இருப்பதால், ஒருவர் அரசியலுக்கு வரக் கூடாது என்று சொல்வது உரிமை மீறல்.

.