புதுவிதமான யுக்திகளை இனி காங்கிரஸ் கையில் எடுக்க வேண்டும் என்கிறார் ஜோதிராதித்ய சிந்தியா.
New Delhi: டெல்லி சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்திருக்கும் நிலையில், கட்சியின் உயர்மட்ட தலைவர்களிடையே மோதல் வெடித்துள்ளனர். நம்மில் சிலர் இன்னும் மத்திய அமைச்சர்களாக உள்ளோம் என்ற கனவில் வாழ்ந்து வருகின்றனர் என்று கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார். சமீபத்தில் ஆம் ஆத்மியை பாராட்டியதற்காக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளரும், டெல்லி காங்கிரசின் மகளிரணி தலைவியுமான சர்மிஸ்தா முகர்ஜியால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.
ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், 'காங்கிரஸ் தலைவர்கள் தங்களை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், நாம் சரியான திசையில் செல்ல முடியாது. நாம் கர்வத்தை தவிர்க்க வேண்டும். அதிகாரத்திலிருந்து 6 ஆண்டுகளுக்கு முன்னரே வந்த பின்னரும் நம்மில் சிலர் இன்னும் தாங்கள் மத்திய அமைச்சகர்கள் என்ற நினைப்புடன் இருக்கின்றனர்' என்று கூறியுள்ளார்.
டெல்லி தேர்தல் குறித்து கருத்து தெரிவித்த அவர், 'டெல்லி தேர்தல் முடிவுகள் என்பவை நம்ப முடியாத அளவுக்கு பேரழிவாக, காங்கிரஸ் மீது கொரோனா வைரஸ் தாக்கியதைப் போன்று இருந்தது' என்றார்.
டெல்லி தேர்தல் முடிவுகள் வந்த பின்னர் முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஜோதிராதித்ய சிந்தியா, கெஜ்ரிவாலுக்கும், அவரது ஆம் ஆத்மி கட்சிக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
'தேர்தல் முடிவுகள் கடும் அதிருப்தியை அளிக்கின்றன. புதுவிதமான முறைகளை காங்கிரஸ் இனி கையாள வேண்டும். காலம் மாறிவிட்டது. நாடும் மாறி விட்டது. மக்களை நாம் சந்திக்கவேண்டும். மக்களவை தேர்தலுக்கு பின்னர் நாம் சில மாநிலங்களில் மட்டுமே ஆட்சியை பிடித்துள்ளோம்' என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து இரண்டாவது முறையாக டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஒரு இடத்தைக் கூட காங்கிரஸ் கட்சி கைப்பற்றாமல் இருக்கிறது. இந்த வீழ்ச்சிக்கு டெல்லியில் காங்கிரஸ் முதல்வராக இருந்தவரும், கடந்த ஆண்டு மறைந்தவருமான கட்சியின் மூத்த தலைவர் ஷீலா தீட்சித்தும் காரணம் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.
டெல்லியின் காங்கிரஸ் பொறுப்பாளராக இருந்த பி.சி. சாக்கோதான் ஷீலா தீட்சித் மீது இந்த குற்றச்சாட்டை முன் வைத்தார். 2013-ல் ஷீலா டெல்லி முதல்வராக இருந்தபோது ஆம் ஆத்மி கட்சி தொடங்கப்பட்டது. அப்போதே காங்கிரசின் வீழ்த்தி தொடங்கிவிட்டது என்று கருத்து தெரிவித்தார். இதன்பின்னர் கட்சிப் பொறுப்பை அவர் ராஜினாமா செய்தார். நீண்ட யோசனைக்கு பின்னர் சோனியா ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டுள்ளார்.
பி.சி. சாக்கோவுக்கு மற்றொரு காங்கிரஸ் முக்கிய தலைவரான மகாராஷ்டிர மாநிலத்தின் மிலிந்த் தியோரா கண்டனம் தெரிவித்துள்ளார். 'மிகச்சிறந்த நிர்வாகி, அரசியல்வாதியான ஷீலா தீட்சித் அவரது மறைவுக்குப் பின்னரும் விமர்சிக்கப்படுவது துரதிருஷ்டவசமானது' என்று அவர் கூறியுள்ளார்.
சில காங்கிரஸ் தலைவர்கள், சுய பரிசோதனை செய்வதற்கு பதிலாக நடவடிக்கை வேண்டும் என்று கருத்துக் கூறியுள்ளனர்.
மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரத்தின் கருத்துக்கு கட்சியின் செய்தி தொடர்பாளர் சர்மிஸ்தா முகர்ஜி கடுமையாக விமர்சித்துள்ளார்.
டெல்லி மக்கள் பாஜகவின் வகுப்புவாத அரசியலை புறக்கணித்துள்ளனர். அவர்களுக்கு நான் தலை வணங்குகிறேன். அவர்கள் 2021 மற்றும் 2022 -ல் தேர்தல் சந்திக்கும் மற்ற மாநில வாக்காளர்களுக்கு முன் உதாரணமாக உள்ளனர் என்று, ஆம் ஆத்மியின் வெற்றி குறித்து ப.சிதம்பரம் கருத்துக்கூறியிருந்தார்.
இதனை விமர்சித்த சர்மிஸ்தா முகர்ஜி, 'பாஜகவை தோற்கடிக்கும் வேலையை மாநில கட்சிகளிடம் காங்கிரஸ் கட்சி ஒப்படைத்து விட்டதா என்பதை ப.சிதம்பரத்திடம் அறிந்து கொள்ள விரும்புகிறேன். அப்படி ஏதும் நடக்கவிட்டால் நாம் ஏன் ஆம் ஆத்மியை பாராட்ட வேண்டும்? ஒருவேளை மாநில கட்சிகளிடம் பாஜகவை தோற்கடிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருந்தால் காங்கிரஸின் மாநில கமிட்டிகளை கலைத்து விடலாமே' என்று கூறியுள்ளார்.
இதன் தொடர்ச்சியாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா,'விமர்சிப்பதற்கு பதிலாக காங்கிரஸ் தலைவர்கள் தங்களைத் தாங்களே சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்' என்று கூறியுள்ளார்.
டெல்லி தேர்தலில் காங்கிரஸ் கட்சி 66 வேட்பாளர்களை நிறுத்தியது. அவர்களில் 63 பேருக்கு டெபாசிட் கிடைக்கவில்லை. அதாவது, பதிவான வாக்குகளில் ஆறில் ஒரு சதவீதத்தைக்கூட அவர்கள் பெறவில்லை.
கட்சியின் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி, 'கட்சியில் சர்ஜிகல் ஸ்ட்ரைக்கைப் போல தேர்தல் தோல்விக்கு பொறுப்பானவர்களை நீக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.