Congress vs DMK: 'இது கூட்டணி தர்மத்திற்கு புறம்பானது என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்'
Congress vs DMK: நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு சரிவர இடங்கள் ஒதுக்கப்படவில்லை என்றும் இது கூட்டணி தர்மத்துக்கு ஏற்றது இல்லையென்றும் கூறி காட்டமாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி. இது தொடர்பாக தமிழக காங்கிரஸின் மூத்த நிர்வாகிகளில் ஒருவரான ப.சிதம்பரம், “அழகிரி அவர்கள் தனது வருத்தத்தைத்தான் சொல்லியிருக்கிறார். அதில் உள்நோக்கம் கிடையாது,” எனக் கூறியுள்ளார்.
முன்னதாக அழகிரி, ‘தமிழகத்தில் நடந்து முடிந்துள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இணைந்து போட்டியிட்டது.
தொடக்கத்திலிருந்து எந்த ஒப்பந்தமும் இல்லாமல் மாவட்ட அளவில் பேசி முடிவெடுப்பதென தீர்மானிக்கப்பட்டது. ஆனால், அந்த முயற்சிகளுக்கு மாவட்ட அளவில் எந்த ஒத்துழைப்பும் இதுவரை கிடைக்கவில்லை.
திமுக தலைமையிலிருந்து அறிவுறுத்தப்பட்ட இடங்களில் கூட காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. 303 ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் பதவிகளில் இதுவரை 2 இடங்கள் மட்டும் திமுக தலைமையால் வழங்கப்பட்டுள்ளது.
27 மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவிகளில் ஒரு மாவட்டட ஊராட்சித் தலைவர் பதவியோ, துணைத் தலைவர் பதவியோ இதுவரை வழங்கப்படவில்லை. இது கூட்டணி தர்மத்திற்கு புறம்பானது என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்,' என்றுள்ளார்.
இந்த திடீர் அறிக்கையால் திமுக - காங்கிரஸ் கூட்டணி முறிந்துவிடும் என்று தமிழக அரசியல் வட்டாரங்களில் பரபரக்கப்பட்டு வருகிறது. இது குறித்து செய்தியாளர்கள் மத்தியில் பேசிய சிதம்பரம், “காங்கிரஸ் கமிட்டி தலைவர் வெளியிட்ட அறிக்கை பற்றி நீங்கள் அவரிடம்தான் கேட்க வேண்டும். இருந்தாலும், அவர் வெளிப்படுத்தியது வருத்தத்தை மட்டும்தான். தற்போதும் நேரம் கடந்துவிடவில்லை. காங்கிரஸுக்கு உரிய இடங்களை திமுக ஒதுக்க முன்வர வேண்டும். இந்தக் கூட்டணி 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும் தொடர வேண்டும் என்பதுதான் எங்களது அனைவரின் விருப்பமும்,” என்றார். உடனே ஒரு செய்தியாளர், “திமுகவை காங்கிரஸ் மிரட்டப் பார்க்கிறதா?” என்றார். அதற்கு சிரித்துக் கொண்டே சிதம்பரம், “நாங்கள் யாரையும் மிரவிட்டவில்லை. எங்கள் தரப்பு கருத்தைத்தான் சொல்கிறோம்,” என்று முடித்தார்.