காந்தி குடும்பத்திற்கு வழங்கி வரப்பட்ட எஸ்பிஜி பாதுகாப்பு ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக காங்கிரஸ் தலைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
New Delhi: காந்தி குடும்பத்திற்கு வழங்கி வரப்பட்ட எஸ்பிஜி (SPG) பாதுகாப்பை ரத்து செய்தது ஏன் என பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் விளக்கம் தரும்படி, காங்கிரஸ் கட்சியினர் விலியுறுத்தினர்.
காங்கிரஸ் தலைவர் சோனியாக காந்தி, அவரது மகன் ராகுல், மகள் பிரியங்காவுக்கு வழங்கப்பட்டு வந்த எஸ்பிஜி பாதுகாப்பை மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடியாக ரத்து செய்தது. இதைத்தொடர்ந்து, அவர்கள் 3 பேருக்கும் இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. இது, மத்திய அரசின் அரசியல் பழிவாங்கும் செயல் என காங்கிரஸ் கட்சி தலைவர்கள் பலர் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
தற்போது பிரதமர் மோடி மட்டுமே எஸ்பிஜி பாதுகாப்பில் இருக்கிறார். அப்படைப் பிரிவில் உள்ள 3,000 வீரர்களும் பிரதமர் மோடியின் பாதுகாப்பை மட்டுமே கவனித்து வருகின்றனர். இதனிடேயே, சோனியா குடும்பத்தினர் தங்களுக்கு சரியான ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றும், பலமுறை எஸ்பிஜி விதிமுறைகளை அவர்கள் மீறியதால் பாதுகாப்பு வீரர்களால் சுமூகமாக செயல்பட முடியவில்லை என்றும் எஸ்பிஜி குற்றம்சாட்டி உள்ளது.
பலமுறை குண்டுதுளைக்காத காரை பயன்படுத்திய ராகுல் காந்தி, 1991ல் இருந்து, 156 வெளிநாட்டு பயணத்தில் 143ல் எஸ்பிஜி உடன் வருவதை தவிர்த்துள்ளார். அதற்காக கடைசி நிமிடத்தில் பயண விவரத்தை அளித்துள்ளார். மேலும், கார் கூரை மீது பயணிப்பது உள்ளிட்ட பல விதிமீறல்களில் ராகுல் ஈடுபட்டுள்ளார்.
கடந்த 1991ல் ராஜிவ் காந்தி படுகொலைக்குப் பிறகு காந்தி குடும்பத்தினரை பாதுகாக்கும் பொருட்டு எஸ்பிஜிக்கு வழங்கப்பட்டு வந்த பொறுப்பு கடந்த நவம்பர் 8ம் தேதியுடன் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், நேற்றைய தினம் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கியது. அதில், எஸ்பிஜி பாதுகாப்பை ரத்து செய்தது ஏன்? என பிரதமர் மோடி பதிலளிக்கும் படி காங்கிரஸ் கட்சியினர் வலியுறுத்தினர். தொடர்ந்து, அவையின் கேள்வி நேரத்தில், சபாநாயகர் ஒம் பிர்லா இருக்கையை முற்றுகையிட்டு 20க்கும் மேற்பட்ட காங்கிரஸ் தலைவர்கள் பிரதமர் மோடிக்கு எதிராக கோஷம் எழுப்பி வந்தனர்.
அவையில் விவசாயிகள் பிரச்சினை குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. அதனால், நீங்கள் இதுபோன்ற முக்கியமான விவாதங்களின் போது இவ்வாறு நடந்து கொள்வது சரியானது அல்ல என்று சபாநாயகர் பிர்லா காங்கிரஸ் தலைவர்களிடம் அறிவுறுத்தியுள்ளார் எனினும் அவர்கள் அமளியை தொடர்ந்தனர்.
பிரதமரே பதிலளியுங்கள், பழிவாங்கும் அரசியலை கைவிடுங்கள், சர்வாதிகாரத்தை கைவிடுங்கள், எங்களுக்கு நீதி வேண்டும் என்று அவர்கள் கோஷம் எழுப்பியுள்ளனர். தொடர்ந்து காங்கிரஸ் தலைவர்கள் கோஷம் எழுப்பிய நிலையில், உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையை விட்டு வெளியேறினார்.