This Article is From Feb 19, 2020

காவல் நிலையம் முன்பு மாட்டுக்கறி விநியோகித்த காங்கிரஸ் தொண்டர்கள்!

கேரள காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளரும், வழக்கறிஞருமான பிரவீன்குமார், தலைமையில் முக்கம் காவல் நிலையத்திற்கு முன்பு மாட்டுக்கறியும், ரொட்டியும் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

காவல் நிலையம் முன்பு மாட்டுக்கறி விநியோகித்த காங்கிரஸ் தொண்டர்கள்!

காவல் நிலையத்திற்கு வெளியே மாட்டுக்கறி விநியோகித்த காங்கிரஸ் தொண்டர்கள்.

Kozhikode:

கேரளாவில் பயிற்சி போலீசாருக்கு அளிக்கப்படும் உணவுப் பட்டியலிலிருந்து மாட்டுக்கறி நீக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலைத் தொடர்ந்து, காங்கிரஸ் தொண்டர்கள் சார்பில் கோழிக்கோடு காவல் நிலையத்திற்கு வெளியே மாட்டுக்கறியும், ரொட்டியும் விநியோகம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கேரள காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளரும், வழக்கறிஞருமான பிரவீன்குமார், தலைமையில் முக்கம் காவல் நிலையத்திற்கு முன்பு மாட்டுக்கறி விநியோகம் செய்யப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக கோழிக்கோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த பிரவீன்குமார் கூறும்போது, சங் பரிவாருக்கு ஆதரவாகச் செயல்படும் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்குப் புரிய வைக்கவே இந்த சம்பவத்தைச் செய்தோம். கேரள முதல்வராகப் பதவியேற்றதும் பிரதமர் மோடியை பினராயி விஜயன் நேரில் சென்று சந்தித்தார். அப்போது பாஜகவுடன் ஏற்றப்பட்ட உடன்படிக்கையைத் தொடர்ந்து, அவர் லோக்நாத் பெஹராவை காவல் ஆணையராக நியமித்தார். 

குஜராத் கலவர வழக்கிலிருந்து மோடியையும், அமித்ஷாவையும் காப்பாற்றியவர் இந்த லோக்நாத். தற்போது அவர் பினராயி விஜயனின் ஒப்புதலுடன், சங் பரிவார் அமைப்பின் கொள்கைகளை அமல்படுத்தி வருகிறார். பினராயி விஜயனின் இரட்டை முகத்தை மாநிலம் முழுவதும் காங்கிரஸ் தெரியப்படுத்தும் என்று அவர் கூறினார். 

கேரளாவில் அண்மையில், போலீஸ் பயிற்சி கழக உணவுப் பட்டியலிலிருந்து மாட்டு இறைச்சி நீக்கப்பட்டுள்ளதாகக் கேரள காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவலர்களுக்கு ஆரோக்கியமான உணவுகளை வழங்க வேண்டும் என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டதாகத் தெரிகிறது. 

பயிற்சி போலீசாருக்கு அளிக்கப்படும் உணவுப் பட்டியலிலிருந்து மாட்டுக்கறி நீக்கப்பட்டதாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, காவல்துறை தரப்பில் விளக்கம் தரப்பட்டது. 

காவல்துறை தரப்பில் அளிக்கப்பட்ட அந்த அறிக்கையில், பயிற்சி காவலர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளை உள்ளடக்கிய உணவக கமிட்டியில் எடுக்கப்பட்ட முடிவின் படி, அந்தந்த பகுதிகளில் கிடைக்கும் உணவைக் கொண்டு ஆரோக்கியமான உணவு வகைகளைத் தயாரிக்க அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. காவலர்களுக்கு ஆரோக்கியமான உணவுகளை வழங்க வேண்டும் என்பதே இதன் நோக்கம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

.