This Article is From Mar 12, 2019

மோடியின் சொந்த மாநிலத்தில் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம்; பரபரக்கும் அரசியல் களம்!

மகாத்மா காந்தி வழியில் நடக்கும் காங்கிரஸ், ஜனநாயகத்தைக் காக்க புதிய சுதந்திரப் போராட்டத்தை ஆரம்பிக்கும்- காங்கிரஸ்

லோக்சபா தேர்தலுக்கான யுக்திகளை வகுக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று குஜராத்தில் நடக்க உள்ளது

ஹைலைட்ஸ்

  • காந்தி ஆசிரமத்தில் காங்கிரஸினர் பிரார்த்தனை செய்தனர்
  • இன்று 'ஜெய் ஜவான், ஜெய் கிசான்' பேரணிக்கும் திட்டமிட்டுள்ளது காங்கிரஸ்
  • பிரதமர் மோடியின் சொந்த மாநிலத்தில் நடக்கும் கூட்டம் என்பதால் பரபரப்பு
Ahmedabad, Gujarat:

லோக்சபா தேர்தலுக்கான யுக்திகளை வகுக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று குஜராத்தில் நடக்க உள்ளது. அகமதாபாத்தில் நடக்கும் இந்தக் கூட்டம், பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலத்தில் நடப்பதால், தேசிய அரசியல் களத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த செயற்குழுக் கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, கட்சித் தொண்டர்கள் மத்தியில் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மகாத்மா காந்தி, சர்தார் வல்லபாய் படேல் பிறந்த மாநிலமான குஜராத்தில் செயற்குழுக் கூட்டம் நடத்துவதன் மூலம், காங்கிரஸ், மொத்த தேசத்துக்கும் உறுதியான தேர்தல் செய்தியைச் சொல்லும் எனப்படுகிறது.&

இந்தக் கூட்டம், முன்னரே நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், பிப்ரவரி 14 ஆம் தேதி புல்வாமாவில் நடந்த தீவிரவாத தாக்குதலை அடுத்து, ஆலோசனைக் கூட்டம் தள்ளிவைக்கப்பட்டது. இன்று நடக்கும் கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்பார்கள் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செயற்குழுக் கூட்டம் குறித்து, காங்கிரஸ் கட்சியின் குஜராத் மாநிலத் தலைவர் ராஜீவ் சதாவ், '1961 ஆம் ஆண்டுக்குப் பிறகு, இப்போதுதான் குஜராத்தில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்திற்கு இன்னொரு முக்கியத்துவமும் இருக்கிறது. 1930 ஆம் ஆண்டு, மார்ச் 12 ஆம் தேதி, மகாத்மா காந்தி, தண்டியில் ‘உப்பு சத்தியாகிரகத்தை' தொடங்கினார். அதை நினைவுகூறும் வகையிலும் இந்தக் கூட்டம் அமையும்.

h81jgag8

மகாத்மா காந்தி வழியில் நடக்கும் காங்கிரஸ், ஜனநாயகத்தைக் காக்க புதிய சுதந்திரப் போராட்டத்தை ஆரம்பிக்கும்' என்று கூறினார்.

காங்கிரஸ் தரப்பினர் இன்று காலை காந்தி ஆசிரமத்தில் பிரார்த்தனை செய்தனர். தொடர்ந்து அவர்கள், சர்தார் படேல் தேசிய நினைவிடத்தில், ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்த உள்ளனர். அதைத் தொடர்ந்து காங்கிரஸ், ‘ஜெய் ஜவான், ஜெய் கிசான்' என்ற பேரணியையும் காந்திநகரில் நடத்த உள்ளது.

பட்டிதர் சமூதாயத்துக்கு இட ஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்தி குஜராத்தில் பெரும் புகழ் பெற்ற ஹர்திக் படேல், இன்று காங்கிரஸில் ராகுல் காந்தி முன்னிலையில் இணைகிறார்.

ஏப்ரல் 11 ஆம் தேதி, குஜராத்தில் லோக்சபா தேர்தல் நடக்கிறது. இந்நிலையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும், காங்கிரஸ் தரப்பைச் சேர்ந்த மூன்று எம்.எல்.ஏ-க்கள், பாஜக-வுக்குத் தாவியுள்ளனர். தேர்தல் நெருங்குவதற்கு முன்னர் இன்னும் பல எம்.எல்.ஏ-க்கள் பாஜக பக்கம் போகக் கூடும் என்று கூறப்படுகிறது. அதை சமாளிக்கும் வகையில் காங்கிரஸ் பல அறிவிப்புகளை இன்று வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

.