This Article is From Aug 08, 2019

தொடரும் பதற்றம்: காஷ்மீருக்குப் போகும் காங். மூத்த நிர்வாகி அனுமதிக்கப்படுவாரா..?

370 சட்டப் பிரிவு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து காஷ்மீரின் முன்னாள் முதல்வர்கள் ஒமர் அப்துல்லா, மெஹ்பூபா முப்டி உள்ளிட்ட 400 பேர் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். 

தொடரும் பதற்றம்: காஷ்மீருக்குப் போகும் காங். மூத்த நிர்வாகி அனுமதிக்கப்படுவாரா..?

இரண்டு நாட்களுக்கு முன்னர் காஷ்மீர் விவகாரம் குறித்து ஆலோசனை செய்ய காங்கிரஸ் காரிய கமிட்டி கூடியது.

New Delhi:

ஜம்மூ காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த சட்டப் பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அம்மாநிலத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இந்நிலையில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் குலாம் நபி அசாத் இன்று காஷ்மீருக்கு செல்ல இருக்கிறார். 

ராஜ்யசபாவின் எதிர்க்கட்சித் தலைவரான அசாத், ஸ்ரீநகருக்குச் சென்று அங்கிருக்கும் காங்கிரஸ் தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளார். ஆனால், காஷ்மீரில் இருக்கும் நிலைமையைக் கருத்தில் கொண்டு அவர் விமான நிலையத்திலிருந்து திருப்பி அனுப்பப்படுவார் என்று சொல்லப்படுகிறது. 

370 சட்டப் பிரிவு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து காஷ்மீரின் முன்னாள் முதல்வர்கள் ஒமர் அப்துல்லா, மெஹ்பூபா முப்டி உள்ளிட்ட 400 பேர் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். 

“ஜம்மூ காஷ்மீர் மக்கள் வருத்தத்தில் இருக்கிறார்கள். அவர்களது வருத்தத்தில் பங்கெடுக்க நான் போகிறேன். காஷ்மீர் வரலாற்றிலேயே அங்கிருக்கும் 22 மாவட்டங்களுக்கும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது இதுவே முதல் முறை. இது போல ஒரு விஷயத்தை நீங்கள் முன்னர் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?” என்று பத்திரிகையாளர்கள் முன்னிலையில் பேசினார் அசாத். 

முன்னாள் முதல்வரான அசாத், 370 ரத்து குறித்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் போதிலும், காங்கிரஸில் இருக்கும் பலர் மத்திய அரசின் நடவடிக்கைக்கு ஆதரவுக்கரம் நீட்டியுள்ளனர். அக்கட்சியின் ஜோதிராத்தியா சிந்தியா, ஜனார்த்தன திவேதி, தீபேந்திர் ஹூடா, மிலிந்த் டியோரா உள்ளிட்டோர், 370 ரத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர். 

இரண்டு நாட்களுக்கு முன்னர் காஷ்மீர் விவகாரம் குறித்து ஆலோசனை செய்ய காங்கிரஸ் காரிய கமிட்டி கூடியது. அதிலும் தனது எதிர்ப்பை தெரிவித்தார் அசாத். காரிய கமிட்டியும் 370 ரத்து செய்யப்பட்ட விதத்துக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. 

.