ரூ. 70 ஆயிரம் கோடி செலவில் விமானங்கள் வாங்கப்பட்டுள்ளன.
New Delhi: ஏர் இந்தியாவுக்கு விமானங்கள் வாங்கப்பட்டதில் ஊழல் நடந்திருப்பதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில், அதுதொடர்பான விசாரணைக்கு வருமாறு முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்திற்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 23-ம்தேதி நேரில் ஆஜராக வேண்டும் என நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2007-ல் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சியில் இருந்தபோது, ஏர் இந்தியா நிறுவனத்திற்காக ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து 48 விமானங்களும், போயிங் நிறுவனத்திடம் இருந்து 68 விமானங்களும் ரூ. 70 ஆயிரம் கோடியில் வாங்கப்பட்டது.
இதில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்ததை தொடர்ந்து, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சிபிஐ விசாரணை நடத்தியது. முதல்கட்ட விசாரணையில் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அமலாக்கத்துறையும் இந்த வழக்கை விசாரித்து வருகிறது.
2007-ல் விமானப் போக்குவரத்து துறை அமைச்சராக பிரபுல் படேல் இருந்தார். அவர் இந்த விவகாரம் குறித்து பேசியபோது, ப.சிதம்பரம் தலைமையிலான அமைச்சர்கள் குழுதான் விமானங்களை வாங்கியதாக தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், சிதம்பரத்திடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ள மத்திய விசாரணை அமைப்பான அமலாக்கத்துறை அவருக்கு சம்மன் அனுப்பி உள்ளது. அவர் 23-ம்தேதி நேரில் ஆஜராகி புகார் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது.