இன்று சூரத்திற்கு வந்த Rahul Gandhiக்கு, காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்
ஹைலைட்ஸ்
- Rahul Gandhi, நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு கேட்டுள்ளார்
- கர்நாடக பிரசாரத்தின்போது ராகுல், சர்ச்சையாக பேசினார்
- காங்கிரஸ் கட்சி, ராகுல் காந்திக்கு ஆதரவு தெரிவித்துள்ளது
Surat, Gujarat: நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையின்போது காங்கிரஸ் (Congress) கட்சியின் தலைவராக இருந்த ராகுல் காந்தி (Rahul Gandhi), “அனைத்து திருடர்களும் தங்களின் பெயரின் பின் பகுதியில் மோடி (Modi) என்று வைத்துள்ளனர்” என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதற்கு குஜராத் மாநிலத்தின் சூரத்தில் (Surat) வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று வந்த நிலையில், ராகுல் காந்தி நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து இன்று சூரத்திற்கு வந்த ராகுல் காந்திக்கு, காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். வழக்கு விசாரணையின்போது, தன் மீது எந்த குற்றமும் இல்லை என்று கூறிய ராகுல், மீண்டும் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று கோரினார்.
இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை டிசம்பர் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிமன்றம், ராகுல் அப்போது நேரில் ஆஜராக வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறியது.
சூரத்திற்கு வந்த ராகுல், தனது ட்விட்டர் பக்கத்தில், “என்னை அடக்க வேண்டும் என்ற நோக்கில் பதியப்பட்ட அவதூறு வழக்கு விசாரணைக்காக நான் இன்று சூரத்திற்கு வந்தேன். அப்போது எனக்கு காங்கிரஸ் தொண்டர்கள் அளித்த உற்சாக வரவேற்புக்கு நன்றிக் கடன் பட்டவனாக இருக்கிறேன்” என்று பதிவு செய்தார்.
குஜராத்தைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ-வான புர்னேஷ் மோடிதான், ராகுலுக்கு எதிரான அவதூறு வழக்கைத் தொடர்ந்தவர். அவர், “மோடி சமூகத்தின் மாண்பை குலைக்கும் வகையில் கருத்து தெரிவித்து அவமதித்துள்ளார் ராகுல்” என்று குற்றம் சாட்டினார்.
ராகுல் காந்தி, கர்நாடகாவில் நடந்த தேர்தல் பிரசாரத்தின்போது, “நிரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி… எப்படி அனைத்துத் திருடர்களும் மோடி என்கிற பெயரை கொண்டுள்ளார்கள்?” என்று பேசினார்.
ராகுல் காந்தி மீது பாஜக தரப்பு, இந்த ஆண்டு பல்வேறு அவதூறு வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. முன்னதாக அமித்ஷா மற்றும் அவரது மகன் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன் வைத்த ராகுல் மீது பாஜக அவதூறு வழக்குப் போட்டது.
With input from PTI, ANI