ஹைலைட்ஸ்
- தொகுதி பங்கீட்டுக்கு அதிமுக, திமுக குழுக்களை அமைத்துள்ளன
- அதிமுக தரப்பில் 3 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன
- திமுக தரப்பில் துரை முருகன் தலைமையில் தொகுதி பங்கீட்டு குழு
நாடாளுமன்ற தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு திமுக அமைத்திருக்கும் குழு, விரைவில் தங்களை அழைப்பார்கள் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிப்பது, தேர்தல் வியூகம் வகுப்பது உள்ளிட்டவகைளுக்கு தமிழக கட்சிகள் தயாராகி வருகின்றன. இதுதொடர்பாக அதிமுக தரப்பில் 3 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து ஆலோசனை நடத்த 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அதில், கே.பி.முனிசாமி, வைத்திலிங்கம், தங்கமணி, வேலுமணி, ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் உள்ளனர்.
தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணிகளுக்கு 7 பேர் கொண்ட குழுவை அதிமுக அறிவித்துள்ளது. அதில், பொன்னையன், நத்தம் விஸ்வநாதன், ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செம்மலை, பி.ஹெச்.மனோஜ் பாண்டியன், ரபிபெர்னார்ட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
அதிமுகவின் பரப்புரை பணிகளை முறைப்படுத்தவும் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதில், தம்பிதுரை எம்.பி, திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், வளர்மதி, கோகுல இந்திரா, வேணுகோபால் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திமுக தரப்பில் பொருளாளர் துரை முருகன் தலைமையில் தொகுதி பங்கீட்டு குழு அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஐ.பெரியசாமி, கே.என்.நேரு, பொன்முடி, எ.வ. வேலு, ஆர்.எஸ். பாரதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அந்த குழுவினர் தங்களை விரைவில் பேச்சுவார்த்தைக்கு அழைப்பார்கள் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.