கனமழை காரணமாக சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல மழை காரணமாக கன்னியாகுமரி, கோவை மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், அரபிக் கடலில் குறைந்தழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளதாகவும் அது 3 நாட்களில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வடதமிழகத்தை ஒட்டியுள்ள வங்கக் கடலில் நாளை மறுநாள் குறைந்தழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, சிவகங்கையில் இன்று காலையில் இருந்து தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் அங்குள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் ஜெயகாந்தன் உத்தரவு பிறப்பித்து உள்ளார். அதேபோல் கன்னியாகுமரி, கோவை ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையிலும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் இன்று அதிகாலை கனமழை கொட்டியது. தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், மாதவரம், போரூர், பம்மல், நுங்கம்பாக்கம், கிண்டி ஆகிய பகுதிகளில் கனமழை பெய்தது.
இதனிடையே சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், 3 நாட்களுக்கு தமிழகத்தின் ஒரு சில இடங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
சென்னையைப் பொருத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது.