நெல்லை கண்ணணுக்கு 13ம் தேதி வரை நீதிமன்ற காவல்!
பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நெல்லை கண்ணனை வரும் ஜன.13 வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று திருநெல்வேயில் நடந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடந்த பொதுக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய தமிழறிஞர் நெல்லை கண்ணனின் உரை ஒன்று சமூகவலைதளங்களில்
வைரலாக பரவியது.
அதில், நெல்லை கண்ணன் இரு சமூகங்களுக்கிடையில் வன்முறையைத் தூண்டுவது போல் பேசியதாக அவர் மீது பல மாவட்டங்களில் பாஜகவினர் அளித்த புகார்களை தொடர்ந்து காவல்துறையினர் நெல்லை கண்ணன் மீது வழக்கு பதிவு செய்தனர்.
தொடர்ந்து, நெல்லை கண்ணனை கைதுசெய்ய வலியுறுத்தி நேற்றைய தினம் சென்னை மெரினா கடற்கரையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்,
சி.பி.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா உள்ளிட்ட முக்கிய பாஜக தலைவர்கள் பங்கேற்றனர்.
இதைத்தொடர்ந்து, பாஜக தந்த தொடர் அழுத்தம் காரணமாக, நேற்றிரவு பெரம்பலூரில் வைத்து நெல்லை கண்ணனை போலீசார் கைது செய்து, நெல்லை அழைத்து வந்தனர். தொடர்ந்து, மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு மருத்துவ பரிசோதனை முடிந்த நிலையில், நெல்லை, முதலாவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நெல்லை கண்ணன் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதனையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி நெல்லை கண்ணனை ஜனவரி 13-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார். இதற்கு பல்வேறு கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
இதனிடையே, நெல்லை கண்ணன் மீது ஏற்கனவே 3 பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், ஜாமின் கிடைக்காமல் இருப்பதற்கான 153 ஏ, 506 1 ஆகிய பிரிவுகள் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.