போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட எச். ராஜா
விநாயகர் சதுர்த்தியையொட்டி சனிக்கிழமை நடைபெற்ற ஊர்வலத்தின்போது, பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா. போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்துக்களுக்கு எதிராக தமிழக காவல் துறை செயல்படுவதாகவும், அதிக ஊழல் தமிழக காவல்துறையில்தான் இருப்பதாகவும் பேசி எச். ராஜா சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமையன்று எச்.ராஜா தலைமையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்றது. அப்போது, குறிப்பிட்ட ஒரு சாலையின் வழியே செல்ல முயன்ற அவரையும், ஊர்வலத்தையும் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து போலீசாரிடம் ராஜா கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவரை சமாதானப்படுத்த முயன்ற போலீசார், நீதிமன்ற உத்தரவுப்படி இந்த சாலையின் வழியே செல்லக் கூடாதென்று அறிவுறுத்தினர்.
இதையடுத்து, சீற்றத்துடன் பேசிய எச்.ராஜா இந்துக்களுக்கு எதிராக போலீசார் செயல்படுகின்றனர், அதிக ஊழல் கறை தமிழக காவல்துறையில்தான் படிந்துள்ளது என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். தொடர்ந்து போலீசாரிடம் வாக்குவாதம் செய்த ராஜா, “ நீங்கள் (போலீஸ்) எல்லோரும் லஞ்சம் வாங்குகிறீர்கள். இந்துக்களுக்கு எதிரானவர்களாக போலீஸ் மாறியுள்ளது. நீங்கள் இந்துக்களை டார்ச்சர் செய்தீர்கள் என்றால், அவர்களில் நான் ஒருவன் என்று சொல்லாதீர்கள். பண்டிகையை கொண்டாட மக்களுக்கு நீங்கள் அனுமதி அளிக்கவில்லை. நீதிமன்ற உத்தரவோ அல்லது வேறு எதுவோ; அதுபற்றியெல்லாம் நான் கவலைப்பட மாட்டேன்“ என்று பேசுகிறார்.
அவர் பேசிய காட்சிகள் அனைத்தும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு இணைய தளங்களில் வைரலாகி விட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, காவல்துறை மற்றும் நீதித்துறைக்கு எதிராக பேசிய எச்.ராஜா மீது தமிழக அரசு சட்ட நடவடிக்கையை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
எச். ராஜாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ள மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அவர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து சட்ட வல்லுனர்களுடன் தமிழக அரசு ஆலோசனை நடத்தும் என்றார். இந்த சம்பவம் நேற்று நடந்த நிலையில், எச்.ராஜா உள்ளிட்ட 8 பேர் மீது பொது அமைதிக்கு இடையூறு ஏற்படுத்துதல், இரு பிரிவினர் இடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசுதல், அனுமதியின்றி கூடுதல், சட்டத்தை மதிக்காமல் செயல்படுதல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் திருமயம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக செய்தி சேனல்கள் தெரிவிக்கின்றன.