சட்ட விதிகளுக்கு உட்பட்டே நீதிமன்றம் செயல்பட முடியும் - நீதிபதி
தந்தை பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை பரப்பியதாக ரஜினிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டது.
கடந்த ஜன.14-ஆம் தேதி துக்ளக் இதழின் 50-ஆவது ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார். இதில் 1971-இல் சேலத்தில் நடந்த நிகழ்வு குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து தமிழகத்தின் பல்வேறு காவல்நிலையங்களில் ரஜினிகாந்த் மீது புகார் அளிக்கப்பட்டது. மேலும், ரஜினிகாந்த் தன் பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகளும் கட்சிகளும் வலியுறுத்தி வந்தன.
இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், தனது கருத்து சரிதான் என்றும் தான் எதையும் கற்பனையாக பேசவில்லை என்றும் தெரிவித்தார். மேலும் தான் மன்னிப்போ, வருத்தமோ தெரிவிக்க முடியாது எனவும் தெரிவித்தார். ரஜினியின் இந்தப் பேச்சுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, சென்னை திருவல்லிக்கேணி மற்றும் கோவை காட்டூர் காவல் நிலையங்களில் கொடுத்த புகார் மீது வழக்கு பதியக்கோரி திராவிடர் விடுதலை கழகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது; புகார் கொடுத்த 15 நாட்கள் முடிவதற்குள் முன்னதாகவே நீதிமன்றத்தை அணுகியது ஏன்..? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
புகார் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு கால அவகாசம் வழங்கிய பின் நீதிமன்றத்தை மனுதாரர்கள் அணுகி இருக்க வேண்டும். இந்த மனுக்கள் விசாரணைக்கு பட்டியலிடபட்டதே தவறு என்றும் நீதிபதி கூறினர். இதனையடுத்து இந்த மனுக்கள் வாபஸ் பெற்றதை தொடர்ந்து தள்ளுபடி செய்யப்பட்டது.
15 நாட்கள் கழித்து நீதிமன்றத்தை அணுகவும் நீதிபதி அறிவுரை வழங்கினார். தந்தை பெரியாரின் சீர்திருத்த கொள்கைகள் மிக முக்கியமானவை; பெரியார் மிகப்பெரிய தலைவர்; அவர்களின் கொள்கைகள் மறுக்க முடியாது; சட்ட விதிகளுக்கு உட்பட்டே நீதிமன்றம் செயல்பட முடியும் என்றும் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.