This Article is From Oct 16, 2019

சர்ச்சை பேச்சு: சீமான் மீது நடவடிக்கை எடுக்க தலைமை தேர்தல் ஆணையர் உத்தரவு!

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்க விழுப்புரம் மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு உத்தரவிட்டுள்ளார்.

சர்ச்சை பேச்சு: சீமான் மீது நடவடிக்கை எடுக்க தலைமை தேர்தல் ஆணையர் உத்தரவு!

சீமான் மீது நடவடிக்கை எடுக்க தலைமை தேர்தல் ஆணையர் உத்தரவு!

ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சைக்குரிய விதமாக பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்க விழுப்புரம் மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு உத்தரவிட்டுள்ளார். 

தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிகளுக்கு வரும் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட இடத்தில் பிரசாரம் செய்தபோது, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். சீமானின் இந்த பேச்சு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதுதொடர்பாக சீமான் மேடையில் உரையாற்றுகையில், “காந்தியை, கோட்சே சுட்டார். அவர் சுட்டது சரிதான் என்று தொடர்ந்து பேசி வருகிறார்கள். பொது வெளியில் தொடர்ச்சியாக அது குறித்து கருத்து தெரிவித்து வருகிறார்கள். 

அதே மாதிரிதான் ராஜீவ் காந்தியைக் கொன்றோம். சரிதான் போடா. ஒரு காலம் வரும். வரலாறு திரும்ப எழுதப்படும். இந்திய ராணுவம், அமைதிப் படை என்கிற அணியாயப் படையை அனுப்பி என் இன மக்களை கொன்று குவித்த, என் இனத்தின் எதிரியான ராஜீவ் காந்தியை தமிழர் தாய் நிலத்தில் கொன்று புதைத்தோம் என்ற வரலாறு எழுதப்படும். 

ஓட்டுக்காக நான் மூடி மறைத்தெல்லாம் பேசும் ஆள் கிடையாது. போட்டா போடு போடாவிட்டால் போ. எனக்கு ஒரு இழப்பும் கிடையாது என்று அவர் கூறினார். இதற்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே, சீமான் மீது விக்கிரவாண்டி போலீசார் பொது அமைதிக்கு குந்தகம் விளைக்கும் வகையில் பேசியதாக 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். காங்கிரசார் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். 

இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், இது போன்ற பல வழக்குகளை சந்தித்துவிட்டேன். இந்த வழக்கை சட்டப்படி சந்திப்பேன். எப்படி பேச வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் விதி உள்ளதா? நான் பேசியதை திரும்பப் பெறப்போவதில்லை என்று அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்க விழுப்புரம் மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு உத்தரவிட்டுள்ளார். மேலும், சீமான் பேசியது குறித்து  விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆணையிட்டுள்ளார்.

.