டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு குக்கர் சின்னத்தை தர முடியாது என்று தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது.
அதிமுகவில் பிளவு ஏற்பட்டபோது கட்சியில் இருந்து சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்டோர் வெளியேற்றப்பட்டனர். அதன்பின்னர் ஜெயலலிதா சட்டமன்ற உறுப்பினராக இருந்து வந்த ஆர்.கே. நகரில் அவரது மறைவுக்கு பின்னர் இடைத் தேர்தல் நடத்தப்பட்டது.
இதில் சுயேச்சையாக டிடிவி தினகரன் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதன்பின்னர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தொடங்கிய டிடிவி தினகரன் கட்சிக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை விடுத்தார். இதுதொடர்பாக அவரது தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது தேர்தல் ஆணையம் அளித்த பதிலில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்பது பதிவு செய்யப்படாத கட்சி. எனவே அந்த கட்சிக்கு குக்கர் சின்னத்தை நிரந்தராக ஒதுக்க முடியாது. பொதுப்பட்டியலில் உள்ள சின்னத்தை குறிப்பிட்ட கட்சிக்கு வழங்குவது நடைமுறை அல்ல.
இவ்வாறு தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது.