கடைகளின் அருகே கூடுவது கொரோனா பரவுவதற்கு நல்ல சூழலை ஏற்படுத்தி விடும் என்று மோடி எச்சரித்துள்ளார்.
ஹைலைட்ஸ்
- ஊரடங்கு உத்தரவால் மக்கள் அவசர கதியில் பொருட்கள் வாங்குகின்றனர்
- அத்தியாவசிய பொருட்கள் மக்களுக்கு கிடைக்குமென மோடி உறுதியளித்துள்ளார்
- மக்கள் அச்சமடைய தேவையில்லை; வீட்டில் இருந்தால் போதும் என்கிறார் மோடி
New Delhi: 21 நாட்கள் ஊரடங்கின்போது, மக்களுக்குத் தேவையானது கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும், இதனால் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றும் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
இன்று நள்ளிரவு முதற்கொண்டு 21 நாட்களுக்கு இந்தியா ஊரடங்கை எதிர்கொள்ளவுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசின் முக்கிய நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.
அத்தியாவசிய தேவைகளைத் தவிர்த்து மற்ற அனைத்து விதமான சேவைகள் நிறுத்தப்படுகின்றன. இந்த நிலையில், ஊரடங்கு தொடர்பாக ட்விட்டரில் முக்கிய தகவலை வெளியிட்டுள்ள பிரதமர் மோடி, 'நாம் ஒன்றிணைந்து கொரோனா வைரஸை எதிர்கொள்வோம். ஒன்றிணைந்தே ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்குவோம்.
பதற்றப்பட்டு மக்கள் அவசர கதியில் பொருட்களை வாங்க வேண்டாம். மக்களுக்குத் தேவையானது கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வீட்டிற்குள்ளேயே தயவு செய்து இருங்கள்.
அன்றாட தேவைக்கான அத்தியாவசிய பொருட்கள், மருந்துகள் உள்ளிட்டவை உங்களுக்குக் கிடைக்கும். மத்திய மாநில அரசுகள் இதற்காக ஒன்றிணைந்து செயல்படுகின்றன. எனவே அச்சம் கொள்ளத் தேவையில்லை' என்று கூறியுள்ளார்.