பணியை ராஜினாமா செய்வதாக வீடியோ வெளியிட்ட காவலர்களில் ஒருவர்
Srinagar: ஜம்மூ - காஷ்மீர் மாநிலத்தின் ஷோபியனிலிருந்து 3 காவலர்களை தீவிரவாதிகள் இன்று காலை கடத்தி, கொலை செய்துள்ளனர். முன்னதாக தீவிரவாதிகள், காவலர்களை பணியிலிருந்து விலகுமாறு எச்சரித்தனர் என்று தகவல் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் சிறப்பு காவல் படையைச் சேர்ந்த காவலர்கள் பலர், தாங்கள் வகித்து வந்த பணியை ராஜினாமா செய்வதாகக் கூறி வீடியோ வெளியிட்டுள்ளனர்.
கப்ரான் கிராமத்தில் இருக்கும் காவலர்கள் வீட்டுக்குச் சென்ற தீவிரவாதிகள், 4 காவலர்களை கடத்தினர் என்று போலீஸ் வட்டாரம் தகவல் கூறுகிறது. கடத்தப்பட்ட காவலர்கள் ஃபிர்தவுஸ் அஹ்மத் குச்சே, குல்தீப் சிங், நிசார் அஹ்மத் தோபி மற்றும் ஃபயாஸ் அஹ்மத் பட் என்று தெரிய வந்துள்ளது. இதில் ஒரு காவலர், 'உள்ளூர் மக்களின்' உதவியோடு மீட்கப்பட்டுள்ளார்.
சிறிது நேரத்தில் 3 காவலர்களையும் கொன்று, அவர்களின் உடலை ஷோபியனுக்கு அருகில் வீசியுள்ளனர் தீவிரவாதிகள். இந்த சம்பவம் காஷ்மீரில் பெரும் பரபரப்பைக் கிளப்பியது.
பணியை ராஜினாமா செய்த இரண்டாவது காவலர்
இந்நிலையில் சிறப்பு காவல் படையைச் சேர்ந்த பல காவலர்கள் தங்களது பணியை ராஜினாமா செய்வதாக தொடர்ந்து வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.
ஒரு வீடியோவில், ‘என் பெயர் நவாஸ் அஹ்மத் லோன். குல்காமில் வசித்து வருகிறேன். எஸ்.பி.ஓ காவலராக நான் வேலை செய்து வந்தேன். எனது சொந்த விருப்பத்தின் பேரில் எனது பணியைத் துறக்கிறேன். யாரும் என்னை வற்புறுத்தவில்லை’ என்று ஒரு சிறப்பு காவல் படை போலீஸ் வீடியோ வெளியிட்டுள்ளார்.
இன்னொரு வீடியோவில், ‘என் பெயர் ஷபீர் அஹ்மத் தோக்கர். எஸ்.பி.ஓ காவலராக கடந்த 8 ஆண்டுகள் வேலை செய்து வந்தேன். இந்த வீடியோ மூலம் நான் காவல் துறையில் பணியாற்ற மாட்டேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று சிறப்பு காவல் படை போலீஸ் தெரிவித்துள்ளார்.
பணியை துறப்பதாக வீடியோ வெளியிட்ட 3வது காவலர்
கடந்த செவ்வாய் கிழமை ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பிடமிருந்து ஒரு மிரட்டல் வீடியோ வந்தது. அதில், ஜம்மூ - காஷ்மீர் மாநிலத்தில் இருக்கும் காவலர்கள் பணியிலிருந்து விலகி விடுங்கள் அல்லது கொல்லப்படுவீர்கள் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் காவலர்கள் கடத்தப்பட்டுள்ளனர். முஜாஹிதீன் அமைப்பு, பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஒரு வீரரை கொன்ற பிறகு இந்த மிரட்டல் வீடியோவை வெளியிட்டுள்ளது.
முஜாஹிதீன் அமைப்பின் மிரட்டல், முக்கியமாக சிறப்பு காவல் படைக்குத் தான் விடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் தான் உள்ளூர் ஆட்களுடன் வேலை செய்து பாதுகாப்புப் படைக்கு தகவல்களை கூறுவார்கள். அவர்கள் கொடுக்கும் தகவலால் தீவிரவாத அமைப்புகளுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.