1983 ஆம் ஆண்டில் தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்தார் ராவ்
Hyderabad: தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் ஆந்திரா முன்னாள் சபாநாயகருமான கோடல்ல சிவ பிரசாத் ராவ் தன்னுடைய வீட்டில், தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார் என்று கூறப்பட்ட நிலையில், அவரது உறவினரான காஞ்சி சாய், “இது தற்கொலை அல்ல, கொலை…” என்று கூறியுள்ளார். முதலில் ராவ், தற்கொலை செய்திருக்கவே வாய்ப்பிருப்பதாக சொன்ன போலீஸ் தரப்பு, தற்போது காஞ்சி சாயின் குற்றச்சாட்டை அடுத்து ‘சந்தேகப்படும் வகையில் மரணம்' என்று வழக்குப் பதிவு செய்துள்ளது.
2014 ஆம் ஆண்டில் ஆந்திரா இரண்டாகப் பிரிக்கப்பட்ட பின்னர் ராவ், அம்மாநில சட்டமன்றத்தில் சபாநாயகராக இருந்தார். 6 முறை எம்.எல்.ஏ-வான ராவ், 5 முறை நர்சரப் பேட்டையிலிருந்தும் 2014 ஆம் ஆண்டில் சத்தனப்பள்ளியிலிருந்தும் சட்டமன்றத்துக்குத் தேர்வு செய்யப்பட்டார்.
ஆந்திராவின் உள்துறை அமைச்சராகவும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார் ராவ். 1983 ஆம் ஆண்டில் தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்தார். அவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். ஒரு விவசாயி குடும்பத்தில் பிறந்த ராவ், குண்டூர் மருத்துவக் கல்லூரியில் பட்டம் பெற்று மருத்துவரானார்.
இந்நிலையில் ராவின் மரணம் குறித்து காஞ்சி சாய், “அவர் தற்கொலை செய்து கொண்டார் என்பதை நான் நம்பவில்லை. எனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சொல்வதை வைத்துப் பார்த்தால் அவர் கொலை செய்யப்பட்டிருப்பார் என்றே தெரிகிறது” என்று பரபரப்பு குற்றச்சாட்டைக் கூறியுள்ளார்.
ராவின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டுவிட்டது. அந்த அறிக்கையும், அவர் தற்கொலை செய்திருக்கவே வாய்ப்பிருப்பதாக கூறுகிறது. ஆனால், தடயவியல் சோதனைக்கும் அவரது உடல் உட்படுத்தப்பட்டுள்ளது. அதில் ராவின் உடலில் ஏதெனும் நஞ்சு உள்ளதா என்பது கண்டறியப்படும். அந்த முடிவுகளுக்காக தற்போது காவல் துறை தரப்பு காத்துள்ளது.
தெலுங்கு தேசம் கட்சியினர், ஆந்திராவின் ஆளும் ஒய்.எஸ்.காங்கிரஸ் கட்சியின் தொடர் துன்புறுத்தல்தான் ராவின் இந்த மரணத்துக்குக் காரணம் என்று குற்றம் சாட்டி வருகிறது.
அதே நேரத்தில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தரப்பு, ராவிற்கு குடும்ப பிரச்னைகள் இருந்து வந்தன. அவரின் மருமகள் துன்புறுத்தல் குறித்து புகார் கொடுத்துள்ளார் என்று கூறியுள்ளது.