Citizenship Act Protest: Shillong-ல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்றிலிருந்து மொபைல் இன்டர்நெட் சேவை மற்றும் எஸ்எம்எஸ் சேவை முடக்கி வைக்கப்பட்டுள்ளது.
Shillong: Citizenship Act Protest: வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மேகாலயாவின் தலைநகரான ஷில்லாங்கில், இன்று குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக பெரும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இன்று மாலை மாநிலத்தின் ராஜ்பவனுக்கு அருகில் காவலுக்கு இருந்த காவல்துறையினர் மீது மக்கள் கற்களை வீசியதாகவும், இதைத் தொடர்ந்து கண்ணீர் புகைக் குண்டு வீசியும் தடியடி நடத்தியும் போலீஸ், கூட்டத்தைக் கலைத்துள்ளதாகவும் தகவல் வந்துள்ளது. ஷில்லாங்கில் தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் குடியுரிமை மசோதாவுக்கு எதிராக போராட்டம் செய்து வருகின்றனர்.
ஷில்லாங்கில் எடுக்கப்பட்டு வெளியாகியிருக்கும் வீடியோக்களில் மக்கள், உடலில் காயங்களோடு மருத்துவமனைக்கு அழைத்து வரப்படுவது தெரிகிறது.
ஷில்லாங்கில் போடப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு இன்று காலை 10 மணி அளவில் தளர்த்தப்பட்டது. அதைத் தொடர்ந்து மீண்டும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்றிலிருந்து மொபைல் இன்டர்நெட் சேவை மற்றும் எஸ்எம்எஸ் சேவை முடக்கி வைக்கப்பட்டுள்ளது.
ஷில்லாங்கில் சிகிச்சைப் பெறும் போராட்டக்காரர்
ஷில்லாங்கில் சந்தைகள் மற்றும் கடைகள் மூடிய நிலையிலேயே இருந்தன. நகரின் முக்கிய மார்க்கெட்டான போலீஸ் பஜாருக்கு அருகே இரண்டு கார்கள் கொளுத்தப்பட்டது வீடியோ மூலம் தெரியவந்துள்ளது.
ஷில்லாங்கிலிருந்து 250 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் வில்லியம் நகரில் இன்று மாநில முதல்வர் கோன்ராட் சங்மா வந்திருந்தார். சுதந்திரப் போராட்ட வீரர் ஒருவரின் நினைவு தினத்துக்கு மரியாதை செலுத்த வந்த அவரை, போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர்.
‘கான்ராட் திரும்பி போ' என்றும் போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்தவர்கள் கோஷம் எழுப்பினர்.
மேகாலயா காவல்துறை, தனது ட்விட்டர் பக்கம் மூலம், தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்றும், ஷில்லாங்கில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டிருப்பதையும் மக்களுக்குத் தெரிவித்தது.
மேகாலயாவின் அண்டை மாநிலமான அசாமிலும் தொடர்ந்து தீவிரப் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதனால் 2 பேர் உயிரிழந்துள்ளனர். திரிப்புராவில் பெரிதாக அசம்பாவிதங்கள் நடக்கவில்லை என்று கூறப்படுகிறது.
குடியுரிமை திருத்த சட்டத்தில், பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் அப்கானிஸ்தானில் இருக்கும் இந்து, சீக்கியர்கள், புத்தர்கள், ஜெயினர்கள், பார்சிக்கள் மற்றும் கிறித்துவர்கள், டிசம்பர் 31, 2014 ஆம் ஆண்டு வரை (5 ஆண்டுகள் இந்தியாவில் இருந்தால்) மத ஒடுக்குமுறைக்கு ஆளாகி இந்தியாவுக்கு வந்திருந்தால் அவர்கள் அகதிகளாக நடத்தப்படாமல், குடியுரிமை வழங்கப்படும் என்கிறது.
இந்தச் சட்டத்தின் மூலம் பாகிஸ்தான், வங்கதேசம், அப்கானிஸ்தானைச் சேர்ந்த முஸ்லிம்களுக்கு இந்தியாவில் குடியுரிமை கொடுக்கப்படாது என்பதை முன்வைத்து எதிர்க்கட்சிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
வடகிழக்குப் போராட்டங்களைத் தணிக்கும் எண்ணத்தில் பிரதமர் நரேந்திர மோடி, “வடகிழக்கு மாநிலத்தவர்களுக்கு நான் ஒன்றை உறுதிபட தெரிவிக்க விரும்புகிறேன். உங்களின் உரிமைகளை, தனிப்பட்ட அடையாளத்தை மற்றும் அழகிய கலாசாரத்தை யாராலும் பறிக்க முடியாது. அது தொடர்ந்து வளர்ந்து தழைத்தோங்கும்,” என்று கருத்து கூறியுள்ளார்.