இது குறித்தான தகவலை காவல்துறையைச் சேர்ந்த போலீஸ் ஒருவரே வீடியோ மூலம் விளக்கியுள்ளார்.
புதிய மோட்டார் வாகனச் சட்டம் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி அமலுக்கு வந்ததில் இருந்து, சாலை விதிமீறல்களுக்கான அபராதம் பன்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளன. பல சாலை விதிமீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு பல்லாயிரக்கணக்கான ரூபாய் அபராதம் விதித்ததாக தொடர்ந்து செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. உதாரணத்திற்கு ஓட்டுநர் உரிமமான லைசென்ஸ் இல்லாமல், வாகனத்தை ஓட்டிச் சென்றால், முதலில் 500 ரூபாய் மட்டுமே அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. தற்போது அதே குற்றத்துக்கு 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த புதிய விதிமீறல்களுக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் சில நேரங்களில் இந்த புதிய மோட்டார் வாகனச் சட்டத்தில் இருந்தும் தப்பிக்க வாய்ப்புள்ளது. இது குறித்தான தகவலை காவல்துறையைச் சேர்ந்த போலீஸ் ஒருவரே வீடியோ மூலம் விளக்கியுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
சுனில் சந்து என்கிற போலீஸால் இணையத்தில் பகிரப்பட்ட வீடியோவை பலரும் தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் ஷேர் செய்து வருகின்றனர். வீடியோவில் சுனில், ‘புதிய மோட்டார் வாகனச் சட்டம், 2019-ன்படி, லைசென்ஸ் இல்லாமல் வண்டி ஓட்டினால் 5,000 ரூபாய் அபராதம், மாசுக் கட்டுப்பாடு குறித்தான சான்றிதழ் இல்லையென்றால் 10,000 ரூபாய் அபராதம் மற்றும் காப்பீடு கட்டாமல் ஓட்டினால் 2,000 ரூபாய் அபராதம்' என்று விளக்குகிறார்.
அதே நேரத்தில் ஓட்டுநர்கள், வாகனத்துக்குச் சம்பந்தமான அனைத்து ஆவணங்களையும் வைத்திருக்கிறார், ஆனால், அதை வேறு இடத்தில் மறந்த வைத்துவிட்டு மாட்டிக் கொண்டால், வெறும் 100 ரூபாய் அபராதம் கட்டி, பிரச்னையிலிருந்து தப்பிக்க முடியும் என்று சுனில் கூறுகிறார்.
100 ரூபாய் கொடுத்து அந்த பிரச்னையிலிருந்து தற்காலிகமாக தப்பித்து, வண்டிக்குச் சம்பந்தமான அனைத்து ஆவணங்களையும் 15 நாட்களுக்குள் சம்பந்தப்பட்டவர்களிடம் காண்பித்து, பிரச்னையிலிருந்து முழுமையாக விடை பெறலாம் என்று விளக்குறார் சுனில்.
இப்படி செய்வதன் மூலம் அதிக நேர விரயம் ஆகும் என்றாலும், பெரும் அபராதத் தொகையிலிருந்து தப்பிக்க முடியும் என்று சொல்லும் சுனில், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது, ஹெல்மட் இல்லாமல் இரு சக்கர வாகனத்தை ஓட்டுவதிலிருந்து தப்பிக்க எந்த வழியும் இல்லை என்றும் சொல்கிறார்.
சுனில் சந்துவின் வீடியோவைப் பார்க்க:
சுனிலின் வீடியோ ஆன்லைனில் வந்ததில் இருந்து அதை சுமார் 1 கோடி பேர் பார்த்துள்ளனர். பலரும் இந்த புதிய தகவலுக்காக சுனிலுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.
Click for more
trending news