கடந்த 24 மணி நேரத்தில் பெங்களூரூவில் மட்டும் 30 பேர் உயிரிழந்துள்ளனர்
ஹைலைட்ஸ்
- கர்நாடக மாநிலத்தில் கொரோனா எண்ணிக்கையானது 85,870 அதிகரிப்பு
- 3,338 நோயாளிகளை அடையாளம் காணமுடியவில்லை
- கடந்த 14 நாட்களில் சுமார் 16,000 ஆக இருந்து 27,000 அதிகரித்துள்ளது
Bengaluru: நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 13 லட்சத்தினை கடந்துள்ள நிலையில் கர்நாடக மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 85,870 ஆக அதிகரித்துள்ளது. இந்த மொத்த எண்ணிக்கையில் ஏறத்தாழ சரிபாதி தலைநகர் பெங்களூரூவிலிருந்து வந்ததேயாகும்.
இந்நிலையில் மொத்த பாசிடிவ் நோயாளிகளின் எண்ணிக்கையில் 7 சதவிகிதமானோர் அதாவது, 3,338 நோயாளிகளை அடையாளம் காணமுடியவில்லை என கர்நாடக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் அவர்களை கண்டுபிடிக்க தேடுதல் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பெங்களூரூவில் மட்டும் கொரோனா எண்ணிக்கை கடந்த 14 நாட்களில் சுமார் 16,000 ஆக இருந்து 27,000 அதிகரித்துள்ளது.
சிறந்த முயற்சிகள் இருந்தபோதிலும் காணாமல் போன கொரோனா வைரஸ் நோயாளிகளை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.
“கொரோனா பரிசோதனைக்கு மாதிரிகளை கொடுக்கும்போது 3,338 நபர்கள் தவறான முகவரி மற்றும் தொடர்பு எண்களை வழங்கியுள்ளனர். இதன் காரணமாக அவர்களை கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.” என பெங்களூரூ மாநகராட்சி கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத் கூறியுள்ளார்.
“பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்துவதே எங்களுடைய பிரதான பணியாக உள்ளது.” என துணை முதல்வர் டாக்டர் அஸ்வத் நாராயண் கூறியுள்ளார்.
இந்நிலையில் இதன் தொடர்ச்சியாக பின்வரும் காலக்கட்டங்களில் பரிசோதனை மாதிரிகள் சோதிக்கப்படும்போது அரசாங்கத்தின் அடையாள அட்டையை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கர்நாடகா சனிக்கிழமையன்று தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக 5,000 க்கும் மேற்பட்ட புதிய கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளின் எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. பெங்களூரில் மட்டும் 2,036 பேர் புதியதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மொத்த எண்ணிக்கை 43,503 ஆக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 72 பேர் மாநிலம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். பெங்களூரூவில் மட்டும் 30 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது 1,796 ஆக அதிகரித்துள்ளது.