This Article is From Mar 13, 2020

போன் செய்தாலே கொரோனா விளம்பரம் வருகிறது: துரைமுருகன் நகைச்சுவை

ஒவ்வொரு நாடுகளிலும் கொரோனாவால் இறக்கிறார்கள். எனவே ஒன்றும் இல்லை ஒன்றும் இல்லை என்று எங்களை காலி செய்யப் பார்க்கிறீர்களா? ஏதாவது ஒன்று நடந்து இடைத்தேர்தல் வந்தால் யார் சந்திப்பது?

போன் செய்தாலே கொரோனா விளம்பரம் வருகிறது: துரைமுருகன் நகைச்சுவை

கொரோனா பீதியால் போப் ஆண்டவரே பிரார்த்தனை கூட்டம் நடத்துவது இல்லை - துரைமுருகன்

ஹைலைட்ஸ்

  • போன் செய்தாலே கொரோனா விளம்பரம் வருகிறது: துரைமுருகன் கேலி
  • சட்டசபையில் உள்ளவர்களுக்கு யாருக்கும் பாதிப்பு இல்லை
  • எந்த முன் எச்சரிக்கையும் இங்கு இல்லை.

தமிழகத்தில் ஒன்றும் இல்லை என்று பேசுகிறீர்கள். ஆனால் போன் செய்தாலே கொரோனா பற்றி விளம்பரம் வருகிறது எனச் சட்டப்பேரவையில் சுகாதாரத்துறை அமைச்சர் பேசியதற்கு திமுக பொருளாளர் துரைமுருகன் நகைச்சுவையாகப் பதில் பேசியுள்ளார். 

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து சட்டசபையில் இன்று சிறப்புக் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது, பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், கொரோனா குறித்த வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். நமது சுகாதார பணியாளர்கள் ஓய்வின்றி பணியாற்றி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள். எனவே யாரும் பதட்டம் அடைய வேண்டாம்.

நம்மிடம் 10 லட்சம் மாஸ்க் உள்ளது. தேவையான தடுப்பு மருந்துகளும் உள்ளன. கொரோனா பாதித்த காஞ்சிபுரம் என்ஜினீயருக்கு தேவையான மருந்துகளைக் கொடுத்துக் குணப்படுத்தி உள்ளோம். முதலில் கொரோனா தொற்று உறுதியான நிலையில், மருத்துவர்களின் சிகிச்சையைத் தொடர்ந்து, அது குணமடைந்தது. எனவே தமிழ்நாட்டில் நோய்த் தொற்று பரவவில்லை.

தமிழகத்தில் 1,465 பேர் தொடர் கண்காணிப்பில் உள்ளனர். தற்போது ஜெர்மனி, பிரான்ஸ், சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து நாடுகளிலிருந்து வருபவர்களையும் மருத்துவ பரிசோதனை செய்த பிறகே வெளியே அனுப்புகிறோம் என்று கூறினார். 

அப்போது திமுக பொருளாளர் துரைமுருகன் பேசும்போது, மக்கள் பயப்பட வேண்டாம். தமிழகத்தில் ஒன்றும் இல்லை என்று பேசுகிறீர்கள். ஆனால் போன் செய்தாலே கொரோனா பற்றி விளம்பரம் வருகிறது. சட்டசபைக்கு வந்தால் வாசலில் சுகாதார பெண் பணியாளர்களை நிறுத்தி கிருமி நாசினி கொடுத்து கைகளைச் சுத்தம் செய்யச் சொல்கிறீர்கள்.

சட்டசபையில் உள்ளவர்களுக்கு யாருக்கும் பாதிப்பு இல்லை. இங்கு யாருக்கும் மாஸ்க் இல்லை. எந்த முன் எச்சரிக்கையும் இங்கு இல்லை. கொரோனா பீதியால் போப் ஆண்டவரே பிரார்த்தனை கூட்டம் நடத்துவது இல்லை.

ஒவ்வொரு நாடுகளிலும் கொரோனாவால் இறக்கிறார்கள். எனவே ஒன்றும் இல்லை ஒன்றும் இல்லை என்று எங்களை காலி செய்யப் பார்க்கிறீர்களா? ஏதாவது ஒன்று நடந்து இடைத்தேர்தல் வந்தால் யார் சந்திப்பது?

பயத்தால் நாங்கள் கை குட்டையை வாயில் பொத்திக் கொள்கிறோம். இருமுவதற்கே பயமாக உள்ளது. எல்லோருக்கும் மாஸ்க் கொடுங்கள் என துரைமுருகன் நகைச்சுவையாகப் பேசியதால் அவையில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிரித்தனர்.

.