தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்யைானது 11 ஆயிரத்தினை கடந்துள்ளது. இன்று புதியதாக 639 பேர் புதியதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 11,224 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த சில நாட்களாக குறைவான எண்ணிக்கையில் பதிவாகியிருந்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையானது தற்போது மீண்டும் உயர்ந்துள்ளது. சென்னையை பொறுத்த அளவில் இன்று 482 பேர் கோரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் 480 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். 2 பேர் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒட்டுமொத்தமாக மாநில அளவில் உயிரிழப்பு விகிதமானது 0.69 ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழந்துள்ள 4 நபர்களுடன் சேர்த்து இதுவரை 78 பேர் மாநிலம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். 6, 971 பேர் சிகிச்சைபெற்று வருகின்றனர் என மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இன்று மட்டும் 13,081 நபர்களின் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளது. அதேபோல 12,445 நபர்கள் பரிசோதிக்கப்பட்டுள்ளனர். இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 398 பேர் ஆண்கள். 241 நபர்கள் பெண்கள். இதுவரை 7,343 ஆண்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல 3,878 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரிசோதனை மையத்தின் எண்ணிக்கையானது 61 ஆக உள்ளது. இதில் நம்பிக்கையளிக்கக்கூடிய செய்தியாக இன்று ஒரே நாளில் மாநிலம் முழுவதும் 634 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.