This Article is From Jun 19, 2020

அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி! மருத்துவமைனயில் அனுமதி!

கடந்த சில தினங்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த அவரை நேற்று முன்தினம் இரவு மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி! மருத்துவமைனயில் அனுமதி!

அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி! மருத்துவமைனயில் அனுமதி!

ஹைலைட்ஸ்

  • அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி!
  • கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2,141 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
  • நேற்று ஒரே நாளில் அதிகபட்சமாக 49 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து அவருக்கு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2,141 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 52 ஆயிரத்து  334 ஆக உயர்ந்துள்ளது.

அதேபோல், நேற்று ஒரே நாளில் அதிகபட்சமாக 49 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் நேற்று 1,373 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 37 ஆயிரத்து 70 ஆகவும் அதிகரித்து உள்ளது. 

சென்னையில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வருவதைதொடர்ந்து, சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மட்டும் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. தொடர்ந்து, ஜூன் 30ம் தேதி வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்ந்து, சென்னை மாநகராட்சி பகுதியில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த 3 மண்டலங்களுக்கு ஒரு அமைச்சரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நியமித்தார். அதன்படி அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய 3 மண்டலங்களுக்கும் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு நேற்று கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த அவரை நேற்று முன்தினம் இரவு மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. 

இதையடுத்து, அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். தற்போது, அமைச்சர் கே.பி.அன்பழகனின் உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவனை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

.