மார்ச் தொடங்கிய லாக்டவுன் ஆகஸ்ட் மாதத்தை நெருங்கியும் கொரோனா குறையவில்லை: மு.க.ஸ்டாலின்
மார்ச் தொடங்கிய லாக்டவுன் காலம் ஆகஸ்ட் மாதத்தை நெருங்கிய பிறகும் கொரோனா பாதிப்பு குறையவில்லை; கூடிக்கொண்டு தான் போகிறது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது, கடந்த ஒரு மாதத்தில் தமிழ்நாட்டில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 163 சதவீதம் அதிகரித்து விட்டது. இறந்தோரின் எண்ணிக்கை 228 சதவீதமும், இறப்பு விகிதம் 23 சதவீதமாகவும் எகிறி விட்டது. கொரோனா நோய்த் தொற்றுப் பரவல் 14 சதவீதம் அதிகரித்து, தினமும் 6 ஆயிரம் பேர் மாநில அளவிலும், சென்னையில் 1000 பேரும் நோய்த் தொற்றுக்கு உள்ளாகும் கொடுமை தொடர்கிறது.
இதுபோன்ற சூழலில் தனக்குத் தெரிந்த நிர்வாகம் - மதுக்கடைகளைத் திறந்து வைத்துக்கொண்டு, ஊரடங்குகளைப் பிறப்பிப்பது மட்டுமே என்று ஒவ்வொரு ஊரடங்காக அறிவித்து - பிறகு பெயரளவிற்குத் தளர்வுகளைச் சொல்லி விட்டு - மக்கள் ஒரு மாவட்டத்திலிருந்து இன்னொரு மாவட்டத்திற்குச் செல்ல முடியாமல் இ-பாஸ் முறையில் தடுத்து வருகிறது அதிமுக அரசு.
ஊழல் தலைவிரித்தாடும் இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்யாமல், ஊரடங்குத் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகும், வீட்டிற்குள்ளேயே மக்கள் - குறிப்பாக வாழ்வாதாரத்தைத் தேடும் ஏழை எளிய மக்கள், தொழிலாளர்கள், கட்டிப் போட்டிருப்பதைப் போல, முடக்கப்பட்டுள்ளார்கள்.
கொரோனாவைக் கட்டுப்படுத்த ஊரடங்கு தான் ஒரே தீர்வு என்று அதிமுக அரசு சொன்னது. ஆனால் மார்ச் மாதம் தொடங்கிய ஊரடங்குக் காலம் ஆகஸ்ட் மாதத்தை நெருங்கியபிறகும் கொரோனா பாதிப்பு குறையவில்லை; கூடிக்கொண்டு தான் போகிறது. அப்படியானால் இவர்களுக்கு ஊரடங்குச் சட்டங்களைக் கூட ஒழுங்காக அமல்படுத்தத் தெரியவில்லை; அதற்குக் கூடத் தகுதி இல்லாதவர்கள் என்பது வெளிச்சத்திற்கு வந்துவிட்டது.
முன்னெச்சரிக்கை - பாதுகாப்பு - ஊரடங்கு - மருந்துகள் - உபகரணங்கள் எதனையும் முறையாகப் பயன்படுத்தும் சக்தியை இழந்துவிட்ட கோமா நிலையை அதிமுக அரசு அடைந்துவிட்டது. இந்த ஊரடங்கைக் கண்துடைப்பு நாடகமாகவே மக்களில் பெரும்பாலானவர்கள் நினைக்கத் தொடங்கிவிட்டார்கள். இந்தக் கண்துடைப்பு நாடகத்துக்கு முற்றுப்புள்ளி எப்போது என்று மக்கள் கேட்கிறார்கள்.
மதிப்பிற்குரிய தமிழக மக்களே! அனைத்திலும் தோல்வியடைந்து விட்ட அதிமுக அரசை இனியும் சிறிதுகூட நம்பியிருக்காமல் - கொரோனாவிலிருந்து பாதுகாத்துக் கொள்ள சுய பாதுகாப்பு நடவடிக்கைகளில் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.