சர்வதேச அளவில் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 லட்சத்தினை கடந்திருக்கக்கூடிய நிலையில், ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கிட்டதட்ட 7,500 ஐ நெருங்கிக்கொண்டிருக்கின்றது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200ஐ கடந்திருக்கின்றது. 650 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மத்திய சுகாதார துறை தெரிவித்திருக்கின்றது.
இந்த நிலையில் தமிழகம் தேசிய அளவில் கொரோனா தொற்று பாதிப்பில் இரண்டாம் இடத்தில் உள்ளது. தமிழகத்தில் 900க்கும் அதிகமானோர் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கின்றர். எட்டு பேர் ஏற்கெனவே உயிரிழந்துள்ள நிலையில் சமீபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது வரை மாநில அளவில் 44 பேருக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 84 வயது மூதாட்டி, 54 வயது பெண், மற்றும் 25 வயது இளைஞர் ஆகியோர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
ஏற்கெனவே சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 74 வயது மூதாட்டி கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட முதியவர்களுக்கு இந்த செய்தி புதிய நம்பிக்கை கொடுப்பதாக அமைந்துள்ளது.