This Article is From Jun 18, 2020

சென்னையில் ஒரே மாதத்தில் 5 மடங்கு கொரோனா தாக்கம் அதிகரிப்பு; ராமாதஸ் சாடல்

அறிவுரைகள் அனைத்தையும் காற்றில் பறக்கவிட்டோம். அதன் விளைவு... எப்போது கொரோனா நம்மைத் தாக்குமோ? என்ற அச்சத்தில் உறைந்து கிடக்கிறோம்.

சென்னையில் ஒரே மாதத்தில் 5 மடங்கு கொரோனா தாக்கம் அதிகரிப்பு; ராமாதஸ் சாடல்

சென்னையில் ஒரே மாதத்தில் 5 மடங்கு கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளதாக பாமக நிறுவனர் ராமாதஸ் கடுமையாக சாடியுள்ளார். 

இதுதொடர்பாக மேலும் அவர் கூறியதாவது, சென்னையில் நேற்று நிலவரப்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்து 556 ஆக அதிகரித்திருக்கிறது. கடந்த மே மாதம் இதே நாளில் 7,117 ஆக இருந்த பாதிப்புகளின் எண்ணிக்கை, ஒரு மாதத்தில் 5 மடங்காக அதிகரித்திருக்கிறது என்பதிலிருந்தே சென்னையில் கொரோனா வைரஸ் நோய் எந்த அளவுக்கு வேகமாக பரவி வருகிறது என்பதை உணர்ந்துகொள்ள முடியும். கொரோனா வைரஸ் நோய்ப் பரவலுக்கு நாம் கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க மறந்ததுதான் முக்கியக் காரணம்.

அதன் விளைவாகத்தான் ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வந்த நிலையில், இப்போது அனைத்து தளர்வுகளும் ரத்து செய்யப்பட்டு, முழுமையான ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இந்த ஊரடங்கு மிகவும் கடுமையாக இருக்கும் என்றும், விதிகளை மீறி தேவையின்றி சாலைகளில் நடமாடுவோர் மீது குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும், வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம், சென்னை காவல்துறை ஆணையாளர் விஸ்வநாதன் ஆகியோர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அவை மதிக்கப்பட வேண்டும்.

கொரோனா வைரஸ் நோய்ப்பரவலைத் தடுப்பதற்காக மத்திய அரசு, மாநில அரசுகள் கூறிய அறிவுரைகளை மதிக்கத் தவறினோம். தேவையின்றி வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும்; தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்; வெளியில் சென்று திரும்பும் போது கைகளை சுத்தமாக கழுவ வேண்டும் என்றெல்லாம் கூறப்பட்ட அறிவுரைகள் அனைத்தையும் காற்றில் பறக்கவிட்டோம். அதன் விளைவு... எப்போது கொரோனா நம்மைத் தாக்குமோ? என்ற அச்சத்தில் உறைந்து கிடக்கிறோம். அனைத்துக்கும் காரணம், நமது அறியாமை அல்ல... அலட்சியம்தான் என்பதை எவரும் மறுக்க முடியாது.

அதேபோல், கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, சோதனைகளை அதிகரிக்க வேண்டும். 12 நாட்கள் முழு அடைப்பு முடிவதற்குள் கொரோனா பாதிப்பு உள்ளவர்கள் அனைவரையும் அடையாளம் கண்டு, மருத்துவம் அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். மொத்தத்தில் இந்த முழு ஊரடங்கு முடியும்போது கொரோனா இல்லாத சென்னை மலர வேண்டும் என்று கூறியுள்ளார். 

.