சீனாவில் கொரோனாவால் பலி எண்ணிக்கை 3200யை தாண்டியுள்ளது.
ஹைலைட்ஸ்
- வைரஸ் உருவான சீனாவில் தாக்கம் படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது
- சீனாவை தவிர்த்து இத்தாலி, ஈரான் நாடுகளில் தாக்கம் அதிகரித்திருக்கிறது
- சீனாவில் பாதிப்பு குறைவது மற்ற நாடுகளுக்கு நம்பிக்கை தரும் வகையில் உள்ளது
சீனாவில் கொரோனா வைரஸின் தாக்கம் படிப்படியாகக் குறைந்து வருகிறது. இதனால், ஹூபே மாகாணத்தின் வுஹானில் அமைக்கப்பட்டிருந்த 2 தற்காலிக மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து மொத்தம் 16 தற்காலிக மருத்துவமனைகளை அரசு மூடியுள்ளது.
வுஹானில் அமைக்கப்பட்டிருந்த உச்சாங் தற்காலிக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 49 பேர் இன்று வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். இதையடுத்து, மருத்துவமனை மூடப்பட்டது.
உச்சாங் ஹாங்ஷான் விளையாட்டு மைதானமானது கடந்த மாதம் 5-ம்தேதி தற்காலிக மருத்துவமனையாக மாற்றப்பட்டது. அதில் 784 படுக்கைகள் அமைக்கப்பட்டன. மொத்தம் 1,124 பேர் இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். அவர்களில் 833 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
மீதமுள்ள 291 பேர் மற்ற மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இன்னொரு தற்காலிக மருத்துவமனை கடந்த பிப்ரவரி 14-ம்தேதி அமைக்கப்பட்டது. அந்த மருத்துவமனையும் இன்று பிற்பகலுடன் மூடப்பட்டது.
இதற்கிடையே, ஈரானில் சிக்கியுள்ள இந்தியர்களில் முதற்கட்டமாக 58 பேர் இந்தியா அழைத்து வரப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது ட்வீட்டர் பதிவில் கூறியதாவது, ஈரான் சென்ற இந்திய விமானப்படை விமானம் மூலம் 58 பேரும் நாடு திரும்புகிறது. தெஹ்ரானில் இருந்து 58 இந்தியர்களுடன் விமானப்படை விமானம் புறப்பட்டது. ஈரானில் சிக்கியுள்ள மீதமுள்ள இந்தியர்களும் விரைவில் மீட்கப்படுவார்கள் எனவும் கூறியுள்ளார்.
மற்றொரு ட்வீட்டர் பதிவில், சிக்கியிருந்த இந்தியர்களை மீட்க உதவி செய்த தூதரக அதிகாரிகள் மற்றும் மருத்துவ ஊழியர்களின் முயற்சிகளுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
சவாலான சூழ்நிலையிலும் செயல்படும் இரானில் உள்ள எங்கள் தூதரகம் மற்றும் இந்திய மருத்துவக் குழுவின் முயற்சிகளுக்கு நன்றி என்று அவர் கூறினார். மேலும், இந்திய விமானப்படைக்கும் நன்றி. ஈரான் அதிகாரிகளின் ஒத்துழைப்பும் பாராட்டுக்குரியது. ஈரானில் இன்னும் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பது தொடர்பாக பணியாற்றி வருகிறோம்” எனத்தெரிவித்துள்ளார்.