தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஹைலைட்ஸ்
- கொரோனா குறித்து பிரபலங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்
- மக்கள் அலட்சியமாக வெளியில் நடமாடுவதாக புகார்கள் எழுகின்றன
- வீட்டில் இருப்பதை தவிர்த்து வேறு வழியில்லை என்கிறார் கங்குலி
''நமக்கு எதுவும் ஆகாது என்று மட்டும் எண்ணாதீர்கள்; பாதிப்பு ஏற்பட்டு விட்டால் நிலைமை மோசமாகி விடும்'' என்று கொரோனா குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
சமூக வலைத்தளங்கள் மூலம் பிரபலங்கள் கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். கொரோனா பாதிப்பு தொடர்பாக மக்கள் இன்னும் அலட்சியமாக உள்ளனர் எனப் புகார்கள் எழுகின்றன.
ஊரடங்கை விடுமுறையாக எண்ணிக்கொண்டு மக்கள் முண்டியடித்துக்கொண்டு சொந்த ஊருக்குச் சென்ற சம்பவங்கள் நேற்று நடந்தன.
சிலர் கொரோனா பாதிப்பைப் பொருட்டாக எண்ணாமல், பைக்குகளில் சுற்றித்திரிவதையும், அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்புவதையும் பார்க்க முடிந்தது.
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது-
என் அன்பான இந்திய மக்களே, நாம் வாழ்க்கையின் மிகவும் முக்கியமான கால கட்டத்தில் இருக்கிறோம். கொரோனா பாதிப்பு விஷயத்தில் மத்திய மாநில அரசுகள், சுகாதார அமைச்சகம் என்ன சொல்லியுள்ளது என்பதைக் கவனமாகப் பாருங்கள். இந்த சூழலில் வீடுகளில் நாம் இருப்பதுதான் மிகவும் முக்கியம். வீட்டில் பாதுகாப்பாக, ஆரோக்கியமான உணவுகளை உண்டு இருங்கள்.
முட்டாள்தனமாக எதுவும் செய்து விடாதீர்கள். நமக்கு ஒன்றும் நடக்காது என்று மட்டும் எண்ணி விடாதீர்கள். ஒருவேளை கொரோனா பாதிப்பு வந்து விட்டால் நமது நிலைமை விபரீதமாகச் சென்று விடும். வீட்டை விட்டு வெளியே வராதீர்கள். இது கொஞ்சம் கஷ்டமான வேலைதான். ஆனால் இதைத் தவிர்த்து வேறு வழியில்லை.
நம் உடலுக்குள் கொரோனா எப்படிச் செல்லும் என்றும் யாருக்கும் தெரியாது. அதைக் குணப்படுத்துவது எப்படி என்றும் தெரியாது. யோசித்துச் செயல்படுங்கள். வீடுகளுக்குள்ளேயே இருங்கள். நாம் இந்த கொரோனாவை எதிர்த்துப் போராடுவோம். நல்லதே நடக்கும்.
இவ்வாறு கங்குலி வீடியோவில் கூறியுள்ளார்.