இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 433-ஆக உயர்ந்துள்ளது.
ஹைலைட்ஸ்
- கொரோனா பாதிப்பிலிருந்து சீனா முழுமையாக மீளவில்லை
- சீனாவில் கொரோனா குறித்த அச்சம் நீங்கத் தொடங்கியுள்ளது
- சீனா கடைபிடித்த வழிகளை வெளிநாடுகள் பின்பற்றுகின்றன.
சீனாவில் உருவாகி உலக நாடுகளைச் சின்னாபின்னமாக்கி வருகிறது கொரோனா வைரஸ். உலகில் இதன் தாக்குதலுக்கு 15 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
இருப்பினும், வைரஸ் தோன்றிய சீனாவில் அதன் தாக்கம் குறைந்து கொண்டு வருவது ஆறுதல் அளிப்பதாக உள்ளது. சீனாவில் கடந்த டிசம்பர் மாதத்தின்போது கொரோனா உருவானது. அது முதற்கொண்டு மொத்தம் 81,093 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது. அவர்களில் 72,703 பேர் பூரண குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அதாவது வைரஸ் தாக்கியவர்களில் 89 சதவீதம் பேர் குணப்படுத்தப்பட்டு உள்ளனர். இன்னும் 5,120 கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 1,749 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
சீனாவில் 3,270 பேரை கொரோனா பலி வாங்கியுள்ளது. மொத்தம் அங்கு 31 மாகாணங்களில் நோய் பரவியிருக்கிறது.
கொரோனா உருவான ஹூபே மாகாணத்தில் மட்டும் ஞாயிறன்று 447 பேர், மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளனர்.
சீனாவில் புதிதாக கொரோனா தாக்கப்படுபவர்கள் எல்லாம் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள்தான். அங்கு 39 வெளிநாட்டவருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. அவர்களில் 39 பேர் தலைநகர் பெய்ஜிங்கில் உள்ளனர்.
கொரோனாவை எதிர்த்துப் போரிட்ட சீன அரசு அங்குப் பாதிக்கப்பட்ட நகரங்களை ஒரு மாதத்திற்கும் மேலாக முடக்கி வைத்திருந்தது.
நோய் தாக்கியவர்கள் முழுமையாகக் கண்காணிக்கப்பட்டு வந்தனர்.
சீன அரசு விதித்த கட்டுப்பாடுகளை ஏற்று நடந்தவர்களுக்குப் பரிசும் பாராட்டும் வழங்கப்பட்டதோடு, மீறியவர்கள் தண்டிக்கப்பட்டனர்.
Quarantine என்ற தனிமைப்படுத்தப்பட்டதுதான் கொரோனாவை கட்டுப்படுத்த சீனாவுக்கு உதவியாக இருந்தது. இந்த முறையைத்தான் தற்போது உலக நாடுகள் கடைப்பிடித்து வருகின்றன.
அங்குள்ள விளையாட்டு மைதானங்கள் தற்காலிக தனிமைப்படுத்தும் மையங்களாக மாற்றப்பட்டன. இப்படி, ஒரு டஜனுக்கும் அதிகமான மையங்களை உடனடியாக உருவாக்கியது சீன அரசு.