This Article is From Mar 19, 2020

சவூதியிலிருந்து 185 பயணிகளுடன் இந்தியா திரும்புகிறது சிறப்பு விமானம்!!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்ற இந்தியர்களை மத்திய அரசு மீட்டு வருகிறது. ஈரானில் தற்போது 250-க்கும் அதிகமான இந்தியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஈரான் அரசு உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சவூதியிலிருந்து 185 பயணிகளுடன் இந்தியா திரும்புகிறது சிறப்பு விமானம்!!

மீட்பு விமானங்களை தவிர்த்து அனைத்து சர்வதேச விமானங்கள் சவூதி வருவதற்கும் சவூதி அரசு தடை விதித்துள்ளது.

ஹைலைட்ஸ்

  • சவூதியில் கொரோனா வைரஸ் பரவி வருவதால் கட்டுப்பாடுகள் விதிப்பு
  • மக்கா, மதினா புனித மசூதிகளுக்கு வெளிநாட்டு புனித பயணிகள் வருவதற்கு தடை
  • வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களை மீட்டு வருகிறது மத்திய அரசு

சவூதி அரேபியாவின் ஜெத்தா நகரிலிருந்து 185 இந்தியப் புனிதப் பயணிகளை ஏற்றிக்கொண்டு சிறப்பு இண்டிகோ விமானம் இந்தியா திரும்புகிறது. 

இதுகுறித்து ஜெத்தாவில் உள்ள இந்தியத் தூதரகம் தனது ட்விட்டர் பதிவில், '185 இந்தியப் புனித பயணிகள் ஜெத்தாவில் இருந்து மும்பைக்கு சிறப்பு விமானம் மூலம் அழைத்துச் செல்லப்படுகின்றனர். அவர்களுடன் சேர்த்து மொத்தம் 3,035 இந்தியர்கள் இந்தியாவுக்கு பத்திரமாகக் கொண்டு வரப்பட்டுள்ளனர்' என்று தெரிவித்துள்ளது. 

இந்த நடவடிக்கைக்காக இண்டிகோ விமான நிறுவனம், சவூதி அரேபிய அரசு ஆகியோருக்கு தூதரகம் நன்றி தெரிவித்துக் கொண்டது. 

கொரோனா வைரஸ் காரணமாக சவூதி அரேபியாவில் 171 பேர் உயிரிழந்துள்ளனர். இதையொட்டி, அங்குள்ள புனிதத் தலங்களுக்கு பயணிகள் வர சவூதி அரசு தற்காலிக தடை விதித்தது. இதேபோன்று அங்கிருப்பவர்கள் வெளிநாடு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. 

இதற்கிடையே, உம்ரா செய்வதற்காக இந்திய முஸ்லிம்கள் ஆயிரக்கணக்கில் சவூதி சென்றிருந்தனர். அவர்கள் ஒவ்வொரு கட்டங்களாக இந்தியா கொண்டு வரப்படுகின்றனர். 

சவூதி அரசு தான் விதித்திருக்கும் கட்டுப்பாடு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், 'கொரோன வைரஸ் பரவுவதைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக இரண்டு புனித மசூதிகளுக்கு செல்ல தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது' என்று கூறப்பட்டிருந்தது. 

இதேபோன்று மீட்பு விமானங்களை தவிர்த்து அனைத்து சர்வதேச விமானங்கள் சவூதி வருவதற்கும் அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. 

அமெரிக்காவின் ஆதரவு நாடான சவூதியில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய கிழக்குப் பகுதியில் கொரோனாவின் மையப்பகுதியாக ஈரான் விளங்குகிறது. 

இங்கு 1400-க்கும் அதிகமானோர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொரேனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தையும், உயிரிழப்பு எண்ணிக்கை 8 ஆயிரத்தையும் கடந்துள்ளது. 

.