This Article is From Mar 21, 2020

''தமிழகத்தில் ஞாயிறன்று அரசுப் பேருந்துகள், மெட்ரோ ரயில்கள் ஓடாது'' - முதல்வர் உத்தரவு!!

சுய ஊரடங்கை மக்கள் அனைவரும் கடைப்பிடித்து கொரோனாவை ஒழிக்க உதவ வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertisement
தமிழ்நாடு Written by

பதற்றத்துடன் பொருட்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும் என்று கோரியுள்ளார் முதல்வர்.

Highlights

  • சென்னையில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படாது
  • பயணிகள் ரயிலும் இந்தியா முழுக்க ஓடாதென அறிவிப்பு
  • ஞாயிறன்று தேசிய அளவில் நடைபெறவுள்ள ஊரடங்குக்கு தயாராகிறது தமிழகம்

கொரோனா நோய் பரவுதலைத் தடுக்கும் விதமாக ஞாயிறன்று சுய ஊரடங்கை கடைப்பிடிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார். இதனைச் செயல்படுத்தும் விதமாகத் தமிழகத்தில் ஞாயிறன்று பேருந்துகள், மெட்ரோ ரயில்கள் ஓடாது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுய ஊரடங்கை மக்கள் அனைவரும் கடைப்பிடித்து கொரோனாவை ஒழிக்க உதவ வேண்டும். ஞாயிறன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை அரசுப் பேருந்துகளும், அன்றைய நாள் முழுவதும் மெட்ரோ ரயில்களும் இயக்கப்படாது. கொரோனாவை தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம். பதற்றத்துடன் பொருட்கள் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். மிகுந்த அத்தியாவசியம் ஏற்பட்டால் மட்டுமே வீட்டை விட்டு வெளியேற வேண்டும். அனைத்து அரசு மற்றும் தனியார் நூலகங்கள் மார்ச் 31-ம்தேதி வரை மூடப்பட்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. 

நேற்றிரவு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து உரையாற்றினார். அவர் தனது உரையில், ''அடுத்து வரும் சில வாரங்களுக்கு அவசியம் ஏற்பட்டாலே தவிர, மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். மக்கள் ஊரடங்கு உத்தரவை ஞாயிறன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை வீட்டை விட்டு வெளியே வருவதைத் தவிருங்கள். நாம் பொறுப்புள்ள குடிமக்களாக இருக்க வேண்டும். மத்திய மாநில அரசுகளின் உத்தரவுகளை ஏற்று நடக்க வேண்டும்.

Advertisement

உணவு போன்ற அடிப்படைத் தேவைப் பொருட்களைப் பதுக்க வேண்டாம். பற்றாக்குறையைச் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா வைரஸ் நாட்டின் பொருளாதாரத்தைக் கடுமையாகப் பாதித்துள்ளது. நிதியமைச்சர் தலைமையிலான குழு இதனைச் சரி செய்யும்.

நமக்குச் சேவைகளைத் தொடர்ந்து வழங்கும் அதிகாரிகள், ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்ளுங்கள். ஞாயிறன்று மாலை 5 மணிக்கு வீட்டின் மொட்டை மாடி அல்லது ஜன்னலுக்கு வந்து 5 நிமிடம் நில்லுங்கள். அப்போது கைகளைத் தட்டி, மணியடித்து உங்களது நன்றியுணர்வை வெளிப்படுத்துங்கள்.

Advertisement

உலகப்போர் 1 மற்றும் 2- ஏற்படுத்திய பாதிப்பை விடப் பல நாடுகளில் கொரோனா அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா சவாலை இந்தியா உறுதியுடன் எதிர்கொள்ளும். நாம் பாதுகாப்பாக இருக்கிறோம் என்று எண்ணிக்கொள்ள வேண்டாம்.

கொரோனாவை சரி செய்ய மருந்து கிடையாது. நாம் நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும். மக்கள் கூடுவதைத் தவிர்க்க வேண்டும். வழக்கம்போல சுதந்திரமாக நடமாடினால் நீங்கள் உங்களையும், உங்களது குடும்பத்தினரையும் ஆபத்தில் தள்ளப் பார்க்கிறீர்கள் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். '' என்று அறிவுறுத்தியிருந்தார். 

Advertisement