காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஹைலைட்ஸ்
- குடியுரிமை சட்டம் தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது
- வழக்கை ஏப்ரல் 21-ம்தேதி வரைக்கும் ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவு
- காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாகத் தமிழகத்தில் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஏப்ரல் 21-ம்தேதி வரையில் போராட்டம் - கூட்டங்களுக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று காவல்துறைக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது. முன்னெச்சரிக்கையாகத் தமிழகத்தில் அனைத்துப் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மக்கள் அதிக எண்ணிக்கையில் கூடுவதற்கு அரசு தடை விதித்துள்ளது.
அரசு கட்டுப்பாடுகளை விதித்து வருவது ஒருபுறம் இருந்தாலும், வைரஸ் அச்சம் காரணமாக மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். பயணிகள் பயணத்தை ரத்து செய்து வருவதால், சில விமானங்கள் மற்றும் ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதைப் பார்க்க முடிகிறது.
இதற்கிடையே, குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராகவும், ஆதரவு தெரிவித்தும் சில வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்தன. அதனை நீதிபதிகள் இன்று விசாரணை நடத்தினர்.
அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், குடியுரிமை சட்டம் தொடர்பான போராட்டங்கள் பல இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டபோதிலும், சில இடங்களில் நடக்கின்றன என்று தெரிவித்தார். இதனைக் கேட்ட நீதிபதிகள் குடியுரிமை சட்டம் தொடர்பான வழக்குகள் அனைத்தையும் ஏப்ரல் 21-ம்தேதி வரை ஒத்தி வைத்தனர்.
மேலும், அன்றைக்குள் கொரோனா அச்சுறுத்தல் முழுமையாக நீங்கி விடும் என்று நம்பிக்கை தெரிவித்த நீதிபதிகள் அதுவரைக்கும் குடியுரிமை சட்டம் தொடர்பான போராட்டங்களுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று காவல்துறைக்கு உத்தரவிட்டனர்.
கொரோனா பரவுவதைத் தடுக்க மக்கள் கூடுவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று மத்திய மாநில அரசுகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
இத்தாலி, ஈரான் போன்ற நாடுகளில் மக்கள் அதிக எண்ணிக்கையில் கூடியதுதான் அங்கு கொரோனா வைரஸ் அதிகளவு பரவியதற்கு முக்கிய காரணம் என்று, தகவல்கள் தெரிவிக்கின்றன.