This Article is From Mar 21, 2020

''கொரோனா குறித்த சட்டமன்றத்திற்கு வரும் எம்எல்ஏக்கள் அச்சப்பட வேண்டாம்'' - தமிழக முதல்வர்

சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் எழுப்பிய கேள்விக்குப் பதில் அளித்துப் பேசினார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

''கொரோனா குறித்த சட்டமன்றத்திற்கு வரும் எம்எல்ஏக்கள் அச்சப்பட வேண்டாம்'' - தமிழக முதல்வர்

தமிழக அமைச்சருக்கே கொரோனா அச்சம் இருக்கும்போது சட்டமன்றம் கூடி விவாதிக்கலாமா என்று கேள்வி எழுப்பினார் ஸ்டாலின்.

ஹைலைட்ஸ்

  • சட்டமன்றத்திற்கு வருவதால் கொரோனா குறித்து ஸ்டாலின் அச்சம் தெரிவித்தார்
  • மக்கள் பிரச்னையை சட்டமன்றத்தில்தான் பேச முடியும் என்கிறார் முதல்வர்
  • தமிழகத்தில் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது

கொரோனா பரவுதல் குறித்து சட்டமன்றத்திற்கு வரும் எம்எல்ஏக்கள் அச்சப்பட வேண்டாம் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதில் அளித்துப் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சட்டமன்றம் இன்று கூடியதும் தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், "கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. வரும் ஞாயிற்றுக்கிழமை காலையிலிருந்து மாலை வரை யாரும் வெளியில் செல்ல வேண்டாம் என்று, பிரதமர் நேற்று தெளிவான ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

குறிப்பாக, தனிமைப்படுத்துவதற்கு வலியுறுத்திவிட்டு கூட்டம் கூடாதீர்கள் என்று தொடர்ந்து எச்சரிக்கை செய்துவிட்டு இந்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்திக்கொண்டிருக்கும் அதேநேரத்தில், நாமே சட்டப்பேரவையில் கூட்டமாக அமர்ந்து இங்கே விவாதித்துக் கொண்டிருப்பது முறையா? என்பதை அரசின் கவனத்திற்கு நான் கொண்டு வருகிறேன்.

கொரோனா அச்சம் காரணமாக ஆங்காங்கே மூடப்படும் சூழ்நிலை உருவாகிக்கொண்டிருக்கிறது. பெரிய கடைகள், பல்பொருள் அங்காடிகள் மூடப்பட்டிருக்கின்றன. இதனால், தினக்கூலிகள், அமைப்புசாரா தொழிலாளர்கள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

அதனால், கேரளாவில் கடைப்பிடிப்பது போல, ரேஷன் பொருட்களை நேரடியாக வீட்டுக்குச் சென்று கொடுக்கும் வசதியை அரசு ஏற்படுத்தித் தர வேண்டும். இதற்கு நீங்கள் கேரளாவைப் போல் இங்கே பாதிப்புகள் இல்லை என்று சொல்வீர்கள்; நான் ஏற்றுக்கொள்கிறேன்.

குறிப்பாக, விவசாயத் தொழிலாளர்கள் உள்ளிட்ட அமைப்புசாரா தொழிலாளர்கள் அனைவருக்கும் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்கிட, அரசே நேரில் சென்று கொடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

நேற்றுகூட பிரதமர் வலியுறுத்தி இருக்கிறார். அதாவது, 'சிறு, குறு, நடுத்தர தொழில்கள் செயல்படாவிட்டாலும், அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இந்த மாதச் சம்பளத்தை நிறுத்தாமல் வழங்கிட வேண்டும்', அதற்கு இந்த அரசு உத்தரவாதம் வழங்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்'' என்று கூறினார்.

இதற்குப் பதில் அளித்துப் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி,'சட்டப்பேரவை கூட்டத் தொடரை ஒத்தி வைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் வலியுறுத்துகின்றனர். கொரோனா பரவுதல் குறித்து தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

மாநில சட்டமன்றம் கூடினால்தான், கொரோனா பரவுதல், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மக்களிடம் கூறி அவர்களின் அச்சத்தைப் போக்க முடியும். மக்கள் பிரச்சினையைச் சட்டமன்றத்தில்தான் பேச முடியும். சட்டமன்றத்திற்கு வருவதால் கொரோனா ஏற்படும் என்று உறுப்பினர்கள் அச்சப்படத் தேவையில்லை. சட்டப்பேரவை நடந்துகொண்டிருந்தால் தான் மக்களின் அச்சம் நீங்கும்' என்று பதில் அளித்தார்.

மற்ற மாநிலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் 3 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னதாக பாதிக்கப்பட்ட ஒருவர் சிகிச்சை பலன் அளித்து வீடு திரும்பியது குறிப்பிடத்தக்கது. 

.