This Article is From Mar 30, 2020

கொரோனா முன்னெச்சரிக்கையாக தமிழக கிராமங்களில் வேப்பிலை, மஞ்சள் நீர் தெளிப்பு!!

வேப்பிலை மற்றும் மஞ்சள் ஆகியவை மிகச்சிறந்த கிருமி நாசினிகளாக உள்ளன. இதைப் பயன்படுத்துவதன் மூலம் கொரோனா பாதிப்பை தவிர்க்கலாம் என கிராம மக்கள் நம்புகின்றனர்.

கொரோனா முன்னெச்சரிக்கையாக தமிழக கிராமங்களில்  வேப்பிலை, மஞ்சள் நீர் தெளிப்பு!!

பெரிய கேன்களில் கொண்டு செல்லப்படும் மஞ்சள், வேப்பிலை நீர்.

ஹைலைட்ஸ்

  • தமிழக கிராமப்புறங்களில் மஞ்சள், வேப்பிலை நீரை வீதிகளில் தெளிக்கப்படுகிறது
  • வேப்பிலையும், மஞ்சளும் சிறந்த கிருமி நாசினிகளாக உள்ளன.
  • இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் 67 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பொதுமக்கள் மஞ்சள் மற்றும் வேப்பிலை கலந்து நீரை கிராமம் முழுக்க தெளித்து வருகின்றனர்.

கொரோனா பரவுதல் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனவை விடவும், அது ஏற்படுத்தியுள்ள அச்சம்தான் மக்களை மிகவும் பாதித்துள்ளது. இதற்கு மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், மக்கள் பாரம்பரிய பொருட்களான மஞ்சள், வேப்பிலை, இஞ்சி, மிளகு, சீரகம் போன்றவற்றை நோய் எதிர்ப்புகளாக பயன்படுத்தி வருகின்றனர்.

இவற்றை பயன்படுத்தும் முறை குறித்து, சமூக வலைதளங்களில் ஏராளமான பதிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த நிலையில் கிராமப்புறங்களில் மஞ்சள், வேப்பிலை கலந்த நீரை தெளிக்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் மினி லாரிகளில் மஞ்சள், வேப்பிலை நீர் கேன்களில் எடுத்துச் செல்லப்பட்டு ஊர் முழுக்க தெளிக்கப்படுகிறது.

இதுகுறித்து, ராமநாதபுரம் மாவட்டம் அய்யனார்புரத்தை சேர்ந்த முருகானந்தம் என்பவர் கூறுகையில், 'பேரையூர் பகுதிக்கு உட்பட்ட வேப்பங்குளம், அய்யனார் புரத்தில் மக்கள் மஞ்சள் பொடி, வேப்பிலை கலந்த நீரை தெருக்களில் தெளித்து வருகின்றனர். கொரோனா பரவுதலை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மஞ்சளும், வேப்பிலையும் நல்ல கிருமிநாசினிகள்' என்று தெரிவித்தார்.

இதேபோன்று ப்ளீச்சிங் பவுடரையும் பயன்படுத்தி மக்கள் தெருக்களை சுத்தப்படுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் கொரோனாவால் 67 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். காலை நிலவரப்படி இந்தியாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1071- ஆக உள்ளது. இவர்களில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட 99 பேரும் அடங்குவார்கள்.

.