அங்கன்வாடி மையங்களில் முதியவர்களுக்கு உணவு - முதல்வர் அறிவிப்பு
ஹைலைட்ஸ்
- அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000: எடப்பாடி அறிவிப்பு
- எண்ணெய் மற்றும் சர்க்கரை விலையின்றி வழங்கப்படும்.
- தமிழகத்தில் இன்று மாலை முதல் ஊரடங்கு அமல்
கொரோனா நிவாரணமாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
நாடு முழுவதும் வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பைக் கட்டுக்குள் கொண்டு வரும் விதமாக 30க்கும் மேற்பட்ட மாநிலங்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளன. முன்னதாக சர்வதேச விமானங்கள், பயணிகள் ரயில்கள் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து சேவைகள் உள்ளிட்டவை மார்ச்.31ம் தேதி வரை முடக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, மத்திய அரசு உள்நாட்டு விமானங்களுக்கும் தடை விதித்து கடுமையாக கட்டுப்பாடுகளை அமல்படுத்தியது. அத்தோடு, இந்த கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தது.
தொடர்ந்து, தமிழகத்திலும் இன்று மாலை 6 மணி முதல் அனைத்து மாவட்ட எல்லைகள் மூடப்படும் என்றும், மக்கள் நடமாட்டத்தைத் தடுக்கும் விதமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவானது இம்மாதம் 31-ம்தேதி வரை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், தினக் கூலிகள், விவசாயக் கூலிகள், ஆட்டோ ஓட்டுநர்கள், டாக்ஸி ஓட்டுநர்கள், கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள், நடைபாதை வியாபாரிகள், முதியோர்கள் உள்ளிட்ட பொது மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், தமிழக அரசு கொரோனாவால் வாழ்வாதாரம் பாதித்த நடைபாதை வியாபாரிகள், ஏழை எளிய மக்களுக்கு நிவாரணம் வழங்க ரூ.3250 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
இதுதொடர்பாக சட்டப்பேரவையில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதில், அனைத்து குடும்ப அரிசி அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 நிவாரணமாக வழங்கப்படும். அத்துடன், எண்ணெய் மற்றும் சர்க்கரை விலையின்றி வழங்கப்படும்.
மார்ச் மாதத்திற்கான ரேஷன் பொருட்களை வாங்கத் தவறிய குடும்ப அட்டைதாரர்கள், ஏப்ரல் மாதத்தில் அதனைச் சேர்த்து வாங்கிக்கொள்ளலாம்.
கட்டடத் தொழிலாளர்கள் மற்றும் ஓட்டுநர் நல வாரியத்தில் உள்ள ஆட்டோ தொழிலாளர்கள் குடும்பங்களுக்குச் சிறப்புத் தொகுப்பாக ரூ.1000 மற்றும் 15 கிலோ அரசி, ஒரு கிலோ பருப்பு வழங்கப்படும்.
வசதியற்றோர், ஆதரவற்றோர் போன்றவர்களுக்கு அவர்கள் இருக்கும் இடத்திலேயே, உணவு தயாரித்து வழங்கப்படும்.
அங்கன்வாடி மையங்களில் உணவருந்தும் முதியவர்களுக்கு அவர்கள் இருக்கும் இடத்திலே உணவு வழங்க நடவடிக்கை.
பதிவு செய்யப்பட்ட நடைபாதை வியாபாரிகளுக்கு பொது விநியோகத் திட்டத்தில் வழங்கப்படும் ரூ.1000த்துடன் கூடுதலாக ரூ.1000 நிவாரணத் தொகை வழங்கப்படும்.
ஊரக வேலைத் திட்டத்தில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு இந்த மாதத்தில் 2 நாட்களுக்கான ஊதியம், சிறப்பு ஊதியமாகக் கூடுதலாக வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.