This Article is From Mar 24, 2020

புதிதாக 3 பேருக்கு பாதிப்பு தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12-ஆக உயர்வு!!

ஏற்கனவே 9 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மெல்ல மெல்ல கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதிதாக 3 பேருக்கு பாதிப்பு தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12-ஆக உயர்வு!!

தமிழகத்தில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.

ஹைலைட்ஸ்

  • தமிழகத்தில் மொத்த பாதிப்பு 12-ஆக உயர்ந்துள்ளது
  • மதுரையை சேர்ந்த 12-வது நபரின் உடல்நிலை ஆபத்தில் உள்ளது
  • தமிழகத்தில் 12,500 பேர் Home Quarantine ல் உள்ளனர்.

தமிழகத்தில் புதிதாக 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 12-ஆக தமிழகத்தில் உயர்ந்துள்ளது. 

புதிதாகப் பாதிக்கப்பட்டவர்கள் சென்னை புரசைவாக்கம், அண்ணாநகர் மற்றும் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜய் பாஸ்கர் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது-

சென்னை புரசைவாக்கத்தைச் சேர்ந்த 25 வயது ஆண் (இவர் லண்டனிலிருந்து வந்தவர்),  திருப்பூரைச் சேர்ந்த 48 வயது ஆண் (லண்டனிலிருந்து வந்தவர்), அண்ணா நகரைச் சேர்ந்த 54 வயது ஆண் (மதுரையிலிருந்து அண்ணா நகருக்கு வந்தவர்) ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இவ்வாறு விஜய பாஸ்கர் கூறியுள்ளார்.

தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் பாதிப்பு குறித்து அமைச்சர் விஜய பாஸ்கர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது-

12,519 பேரை வீட்டில் தனிமைப்படுத்தி வைத்துள்ளோம். அவர்களது வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டி விடுகிறோம். நிறையப் பேர், வீட்டில் தனிமைப்படுத்தப்படுவதை அலட்சியமாக எடுத்துக் கொள்கின்றனர். இதையடுத்து அவர்களது வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டப்படுகிறது. 

கொரோனா பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து வந்தவர்கள் கண்டிப்பாக Home Quaratine எனப்படும் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். இது வேண்டுகோள் அல்ல. தமிழக அரசின் உத்தரவு. பொதுமக்களின் நலனுக்காக, வைரஸ் சமூக பரவலாக மாறாத அளவுக்கு அவர்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது.

ஸ்டிக்கர் ஒட்டும் பணியில் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், சுகாதாரத்துறை அதிகாரி, வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். 

சமூக பரவலாக கொரோனா பரவல் ஆகி விடக்கூடாது என்பதற்காக 144 தடை உத்தரவைத் தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது. 

இங்குக் கட்டுப்பாட்டு அறையில் இரவு பகல் பார்க்காமல் மருத்துவர்கள், பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். 512 பேரின் இரத்த மாதிரிகளைச் சோதனை செய்ததில் 503 பேருக்கு நெகட்டிவாகவும், 9 பேருக்கு பாசிட்டிவாகவும் ரிசல்ட் வந்துள்ளது. இன்னும் 37 மாதிரிகளுக்கு முடிவு வரவில்லை. 

சென்னை, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, தஞ்சை, கோவை, புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, கடலூர், திருவாரூர், நெல்லை இந்த 10 மாவட்டங்களில் Home Quarantine அதிகமாக உள்ளது. அவர்களை அந்தந்த மாவட்ட ஆட்சியர் கவனித்துக் கொள்வார்கள்.

பாதிக்கப்பட்டவர்களில் மதுரையைச் சேர்ந்த 54 வயது ஆணின் நிலைமை சற்று அபாய கட்டத்தில் உள்ளது. ஏற்கனவே அவருக்கு இதய கோளாறுகள் இருக்கின்றன. சர்க்கரை நோய், இரத்த அழுத்தமும் காணப்படுகிறது. அவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர் வெளிநாடுகளில் பயணம் மேற்கொள்ளவில்லை. அவர் வெளி மாநிலங்களுக்கும் செல்லவில்லை. எனவே, வெளி நாடு, மாநிலங்களுக்குச் சென்று வந்தவர்களுடன் அவருக்குத் தொடர்பு இருந்ததா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். பாதிக்கப்பட்ட மற்றவர்களின் நிலைமை சீராக உள்ளது. 

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

.