அடுத்த 3 நாட்களில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்துவிடும்: எடப்பாடி பழனிசாமி
ஹைலைட்ஸ்
- அடுத்த 3 நாட்களில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்துவிடும்
- புதிதாக கொரோனா தொற்று எதுவும் இருக்காது
- இந்தியாவில் எந்த மாநிலத்திற்கும் ரேபிட் கிட் கருவிகள் வந்து சேரவில்லை
அடுத்த 3 நாட்களில் தமிழகத்தில் புதிதாக கொரோனா தொற்று எதுவும் இருக்காது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது, மாவட்ட அளவில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் பற்றி ஆட்சியர்களிடம் கேட்டறிந்தேன். தமிழகத்தில் இன்று மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1242-ல் இருந்து 1267-ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 118 இல் இருந்து 180ஆக உள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 15-ஆக உள்ளது. தமிழகத்தில் அரசு சார்பாக 17, தனியார் சார்பில் 10 என மொத்தம் 27 பரிசோதனை மையங்கள் உள்ளன. நாள்தோறும் சராசரியாக 5,590 பேருக்கு பரிசோதனை செய்யும் வசதி தமிழகத்தில் உள்ளது.
தற்போது 3,337 வென்டிலேட்டர்கள் தமிழகத்தில் உள்ளதாகவும், 2 லட்சம் பிபிஇ கவசங்கள் தமிழக அரசிடம் உள்ளதாக தெரிவித்தார். 3 லட்சம் என்95 முகக்கவசங்கள் அரசிடம் உள்ளதாகவும், 1,95,000 பிசிஆர் கிட் உள்ளன எனவும் கூறினார். அனைத்து மாவட்டங்களுக்கும் பிசிஆர் கருவிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன எனவும் கூறினார்.
கொரோனா தொற்று எளிதாக பரவும் என்பதால் மிகவும் சவாலாக உள்ளது. வெளிநாடுகளுக்கு சென்று திரும்பிய பணக்காரர்கள்தான் கொரோனாவை இறக்குமதி செய்துள்ளனர். ஏழைகளுக்கு எந்த நோயும் இல்லை. இந்தியாவில் எந்த மாநிலத்திற்கும் இன்னும் ரேபிட் கிட் கருவிகள் வந்து சேரவில்லை. மருத்துவ உபகரண கொள்முதலில் தாமதம் என்ற எதிர்கட்சிகளின் விமர்சனம் தவறானது. கொரோனா தடுப்பதில் அரசு சிறப்பாக செயல்படுவது எதிர்க்கட்சிகளுக்கு பிடிக்கவில்லை. புயல், சுனாமி வந்தாலும் மு.க.ஸ்டாலின் குறை சொல்லிக்கொண்டே தான் இருப்பார்.
இந்தியாவிலேயே தமிழகம்தான் முன்னெச்சரிக்கையாக மருத்துவ உபகரணங்களை வாங்கி வைத்துள்ளது ஆதரவற்ற 54 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது எனவும் கூறினார். அடுத்த 3 நாட்களில் தமிழகத்தில் புதிதாக கொரோனா தொற்று எதுவும் இருக்காது எனவும், இன்னும் சில நாளில் ஜீரோ ஆகும் எனவும் கூறினார். ஏழை, எளிய மக்கள் வாங்கும் அளவுக்கு காய்கறிகளின் விலையை அரசு கட்டுப்படுத்தியுள்ளது என்று கூறினார்.