This Article is From Feb 03, 2020

'தமிழகத்தில் 12 பேர் கண்காணிக்கப்படுகின்றனர்' - கொரோனா பாதிப்பு குறித்து அமைச்சர் விளக்கம்

அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா வைரஸால் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் பாதிப்பு ஏதும் இதுவரையில் ஏற்படவில்லை.

'தமிழகத்தில் 12 பேர் கண்காணிக்கப்படுகின்றனர்' - கொரோனா பாதிப்பு குறித்து அமைச்சர் விளக்கம்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் யாருக்கும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று அமைச்சர் கூறியுள்ளார்.

தமிழகத்தில் 12 பேர் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் 12 பேர் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், அவர்களிடம் அறிகுறிகள் ஏதும் இல்லை என்றும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக இன்று அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது-

சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் 10 பேர் கண்காணிப்பில் உள்ளனர். தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அவர்கள் உள்ளனர். அவர்களிடம் கொரோனா வைரஸ் பாதிப்புக்கான அறிகுறிகள் ஏதும் இல்லை. திருச்சியில் பயணி ஒருவர் கண்காணிப்பில் இருக்கிறார். அவருக்கும் அறிகுறி ஏதும் இல்லை. ராமநாதபுரத்தில் ஒருவர் உள்ளார். அவருக்கும் அறிகுறி இல்லை.

பொதுமக்கள் யாரும் இதனால் அச்சம் கொள்ள வேண்டாம். இது பரவக்கூடிய நோய். இருப்பினும் தமிழகத்தில், இதுவரைக்கும் கொரோனா வைரஸ் நோயாளி உறுதிப்படுத்தப்படவில்லை. கிண்டி கிம்ஸ் மருத்துவமனையில் இரத்த மாதிரி அளிக்கப்பட்ட 48 மணி நேரத்திற்குள் முடிவு தெரிந்து விடும் என்பதால் விரைந்து நம்மால் சிகிச்சை அளிக்க முடியும். 

வெளியே செல்பவர்கள் வீட்டிற்கு வந்ததும் கைகளை சோப்பு போட்டு கழுவுவதன் மூலம் நோய் பரவுவதை குறைக்க முடியும்.

இவ்வாறு அமைச்சர் சி.விஜய பாஸ்கர் கூறினார். 
 

இந்தியாவில் இதுவரை கண்டறியப்பட்டுள்ள 3 பாதிப்புகளுமே கேரள மாநிலத்தின் வெவ்வேறு இடங்களில் இருந்து வந்துள்ளன. அம்மாநிலத்தில் 1,700 பேருக்கு கொரோனா பாதிப்பு இருக்குமோ என்கிற சந்தேகத்தில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அதிலும் 70 பேர் மருத்துவமனைகளில் தனி வார்டுகள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். 

.