தமிழகத்தில் கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது - அமைச்சர் விஜயபாஸ்கர்
ஹைலைட்ஸ்
- தமிழகத்தில் மின்னல் வேகத்தில் கொரோனா பரவுகிறது: விஜயபாஸ்கர் எச்சரிக்கை
- 15 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு
- வேகமாக பரவுவதால் மக்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம்
தமிழகத்தில் மின்னல் வேகத்தில் கொரோனா பரவுகிறது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் நேற்றைய தினம் வரை, மொத்தமாக 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது சென்னையில் புதிதாக மூவருக்கு கோவிட்-19 எனப்படும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, இன்று நடைபெற்ற சட்டசபைக் கூட்டத்தொடரில் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இந்த கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பது மிகப்பெரிய சவாலான நடவடிக்கையாக உள்ளது. எனினும், அரசு பொதுமக்களை பார்த்துக் கொள்கிறது, மக்கள் செய்ய வேண்டியது வீட்டில் இருப்பது தான் என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் வெளிநாட்டில் இருந்து தமிழ்நாடு வந்துள்ள 12,519 பேர் 28 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்றும் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பவர்கள் வெளியே சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மதுரையில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நோயாளியின் உடல்நிலை தற்போது, ஆபத்தான நிலையில் உள்ளது. அவருக்கு ஏற்கனவே பல்வேறு நோய்கள் இருந்ததால் ஆபத்தான நிலையில் உள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அரசின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அழிக்க வேண்டும். வீட்டில் இருப்பதை விடுமுறையாக கருதி சுற்றுலா செல்லக் கூடாது. உலகத்தின் பதற்றத்தை தமிழக அரசு உணர்ந்ததால்தான் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வல்லரசான அமெரிக்காவையே கொரோனா அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.
அத்துடன் கொரோனா வேகமாக பரவுவதால் மக்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம். மக்கள் உயிரை காப்பதே அரசின் நோக்கம், கொரோனோவை ஒழிக்க மக்களின் ஒத்துழைப்பை அரசு எதிர்பார்க்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கொரோனா தொற்றுக்கு மட்டும் சிகிச்சையளிக்கும் வகையில் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள அரசு பன்னோக்கு மருத்தவமனையில் தனிவார்டு அமைய உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். 350 படுக்கைகளுடன் கொரோனா தனிவார்டு நாளை பயன்பாட்டுக்கு வருகிறது என்று மருத்துவமனையில் உள்ள தனி வார்டுகளை ஆய்வு செய்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார்.