மதுரையை சேர்ந்த ஒருவர் இன்று அதிகாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஹைலைட்ஸ்
- ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
- உடல்நிலையில் முன்னேற்றம் - 2 நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார்
- கொரோனா பாதிப்பிலிருந்து ஒருவர் மீள்வது அச்சத்தை சற்று போக்கியுள்ளது
கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளி ஒருவர் குணம் அடைந்து வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார். இது கொரோனாவால் அச்சம் கொண்டிருக்கும் மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அமைச்சர் விஜய பாஸ்கர் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது-
தமிழகத்தின் 2-வது கொரோனா பாதிக்கப்பட்ட நபர் டெல்லியில் இருந்து சென்னை வந்திருந்தார். அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட பின்னர் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருகிறோம். அவர் குணமடைந்து வருகிறார். கடந்த 2 முறை எடுக்கப்பட்ட சோதனையில் அவருக்கு கொரோனா இல்லை என தெரியவந்துள்ளது. இன்னும் 2 நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு விடுவார்.
இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி மொத்தம் 2,09,276 பேரிடம் கொரோனா சோதனை நடத்தப்பட்டுள்ளது. அவர்களில், 15,492 பேர் கண்காணிப்பில் உள்ளனர். மருத்துவமனையில் 211 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். மொத்தம் 890 பேரிடம் இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. அதில் 23 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.
இதற்கிடையே இன்று தமிழக மக்களுக்கு உரையாற்றிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று கோரிக்கை வைத்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட வீடியோ பதிவில், 'அரசு மட்டும் நடவடிக்கை எடுத்தால் போதாது. உங்களது ஒத்துழைப்பும் மிக மிக அவசியம்.
நோயின் தீவிரத்தை உணர்ந்து நீங்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் அவர்களாகவே முன்வந்து தங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். தவறினால் உள்ளாட்சித்துறைக்கோ, காவல்துறைக்கோ அவர்கள் பற்றிய விவரத்தை தெரிவிக்கலாம்.
தனிமைப்படுத்துதல் என்பது உங்கள் குடும்பத்தையும், நாட்டையும், சமூகத்தையும் பாதுகாப்பதற்காகத்தான். உங்கள் குடும்பம் உங்களுக்கு எவ்வளவு முக்கியமோ அதைப்போல தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் அரசுக்கு முக்கியம். இதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.' என்று கூறினார்.